ஸ்ரீராமர் கெட்டப்பில் நயினார் நாகேந்திரன்.. நெல்லை பேனரால் தொல்லை! தொண்டர்களுக்கு பறந்த வார்னிங்!
சென்னை: நெல்லையில் நேற்று தமிழக பாஜக சார்பில் மண்டல பூத் கமிட்டி மாநாடு நடைபெற்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக இந்த மாநாட்டுக்கு நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சிலர் அவரை ஸ்ரீராமர் போல எடிட்டிங் செய்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுபோன்ற செயல்களை இனிமேல் யாரும் செய்யக் கூடாது என கண்டித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
தமிழக பாஜக சார்பில் நெல்லையில் நேற்று மண்டல அளவிலான பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கலந்துகொண்டார்.
இதற்காக அவர் தனியார் விமானத்தில் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறங்கினார். அங்கிருந்து வாகனத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.

நெல்லை மாநாடு
இந்த தேநீர் விருந்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 35க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயார் செய்திருந்தார் நயினார். இதில் தமிழக பாஜக தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லை பாரம்பரிய சுவையோடு தேநீர் பரிமாறப்பட்டதோடு, தேநீரோடு சில சிற்றுண்டிகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து நேரடியாக மாநாடு நடைபெறும் மைதானத்திற்கு அமித்ஷா சென்றார். தொடர்ந்து மாநாட்டை முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நெல்லை மாநாடு
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக தான் பதவி ஏற்ற நிலையில் முதன் முறையாக தனது மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தார் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன். அமித்ஷா செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான பிரம்மாண்ட அலங்கார வளைவுகள் பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவற்றை அவரது ஆதரவாளர்கள் அமைத்திருந்தனர். குறிப்பாக நயினார் நாகேந்திரனை ஸ்ரீராமர் போல எடிட்டிங் செய்து சில ஆதரவாளர்கள் போஸ்டர் வெளியிட்டிருந்தனர்.
நயினார் நாகேந்திரன்
இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தது இந்த நிலையில் ராமருடன் தன்னை ஒப்பிட்டு பதாகை வைக்கப்பட்டு இருப்பதால் வேதனை அடைந்ததாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான்.
ராமர் போஸ்டர்
சேது சமுத்திரம் விவகாரத்தில் இராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான்.
போஸ்டர் பிரச்சனை
நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இது போல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications