எடப்பாடியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் திடீர் மீட்டிங்.. நடந்த முக்கிய ஆலோசனை! பிளான் என்ன?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கூட்டணியில் மேலும் சில கட்சிகளை கொண்டு வருவது, சீட் விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சுமார் 6 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள்
வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 20 சீட்களை வாங்கியிருந்தது. ஆனால் இந்த முறை கணிசமான தொகுதிகளை வாங்குவதில் பாஜக உறுதியாக உள்ளது.
இதற்காக, அதிமுகவுடன் ஆலோசனை நடத்தவும், பரப்புரையை கூட்டாக முன்னெடுக்கவும், தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக மேலிடம் நியமித்துள்ளது. இந்தக் குழுவில், பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதிக தொகுதிகளை கேட்க முடிவு
பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று சென்னைக்கு வந்த இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். பாஜக செல்வாக்கு மிக்க தொகுதிகளை விட்டுவிடக்கூடாது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
எடப்பாடியை சந்தித்து பேசினர்
அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் ஆகியோர் விலகியுள்ள நிலையில், அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை என்று கூறி வருகின்றனர். அதேவேளையில், ஓ. பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா என்பதிலும் சந்தேகம்தான். எனவே, இவ்வாறு பல விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது செவ்வந்தி இல்லத்தில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் வைஜெயந்த் பாண்டா எம்பி நேரில் சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் திரு. ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை கொண்டு வருவது தொடர்பாகவும், சீட் விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என்கிறது அரசியல் வட்டாரங்கள். இதேபோல் வரும் 12 ஆம் தேதி மதுரையில் பாஜக நயினார் நாகேந்திரன் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளதால் அந்த தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications