மதுரை மாநகராட்சியில் ஒரு லட்சம் வரி விதிப்புகள் மறு ஆய்வு.. திமுகவை கட்டம் கட்டும் நிர்மல் குமார்?
மதுரை: திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.150 கோடி அளவில் சொத்து வரி முறைகேடு விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதில் மேயராக இருந்த இந்திராணி பதவி இழந்தார். அதுமட்டுமல்லாமல் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டதோடு, மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியது.
மதுரையில் இந்த பிரச்சனை பூதாகரமாக மாறியதால், அமைச்சர்களாக இருந்த மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற கண்காணிப்பில் கீழ் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் ஒரு லட்சம் வரி விதிப்புகள் மறு ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தவெக ஆட்சிக்கு வந்தபின் மாநகராட்சி ஆணையராக கவுரவ் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் பொறுப்பு அமைச்சராக சிடிஆர் நிர்மல் குமார் இருப்பதால், மாநகராட்சி ஊழல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. மதுரை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆய்வு செய்யப்படுகிறது என்று கூறினாலும், பின்னணியில் திமுகவே இலக்கு என்று சொல்லப்படுகிறது.
மதுரை மாநகராட்சி ஆணையர் கவுரவ் குமார் முதற்கட்டமாக சொத்து வரி பாரபட்சம், குடியிருப்புகளுக்கான வரி நிர்ணயம், பெரிய நிறுவனங்களுக்கு சதுர அடிகளை குறைத்து வரி நிர்ணயம் போன்ற புகார்களில் கவனம் செலுத்தி வருகிறார். சுமார் 3 மண்டலங்களில் உள்ள ஒரு லட்சம் வரிவிதிப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான பணிகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வரி விதிப்பில் முறைகேடு இருந்தால், புதிய வரிகள் விதிக்கப்படும். விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. மின்சார இணைப்பு அடிப்படையில் 58 ஆயிரம் வணிக கட்டடங்களுக்கான வரி விதிப்பு, 1063 பள்ளி, கல்லூரி, மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட உள்ளன.
இருப்பினும் மதுரை மாநகராட்சியில் விசாரிக்கையில், இந்த மறுஆய்வுக்கும் சொத்து வரி முறைகேடு விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த சொத்து வரி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெறும் ரூ.1.50 கோடி அளவிற்கான முறைகேடுகள் மட்டுமே கண்டறியப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications