அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?
சென்னை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம் ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் எல்.முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என்று தெரிகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளையும், அமமுகவுக்கு 11 தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாஜக தரப்பில் விருப்ப தொகுதிகளின் பட்டியல் எடப்பாடி பழனிசாமி வசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக பாஜக தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் முகாமிட்டுள்ளார். கடந்த முறை 4 தொகுதிகளில் பாஜக வென்ற நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகளில் பாஜக கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
அதனால் வலிமையான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் கவனமாக இருக்கிறது. இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே எல்.முருகனுடன் பாஜக தலைமை பேசிவிட்டதாக தெரிகிறது.
2021 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின் எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். சுமார் 5 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து வரும் எல்.முருகன், மாநில அரசியலுக்கு அனுப்ப பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதனால் எல்.முருகனை அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம் ஆகிய இரு தொகுதியில் ஒன்றில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழியிடம் சுமார் 1,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எல்.முருகனின் தோல்விக்கு நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் காரணமாக அமைந்தது. இதனால் இந்த முறையாவது எல்.முருகன் வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications