அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்; சசிகலா அதிமுகவுக்கு திரும்பலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது பேசியதை எல்லாம் இப்போது மறந்துவிட்டது திமுக. திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து பொதுமக்கள் பேசுகின்றனர்.
புதிய திட்டங்களை உருவாக்குவதில் போதுமான அறிவாற்றல் திமுகவுக்கு இல்லை. மாநில நலனுக்கான திட்டங்களை வகுப்பதில் கடந்த 6 மாதங்களாக எந்த செயல்பாடும் திமுக அரசிடம் இல்லை. ஒரு ஆட்சி அமைந்து 6 மாதம் எந்த ஒரு மதிப்பீடும் செய்ய முடியாது. தமிழகம் அடுத்த 5, 10 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தொலைநோக்குப் பார்வை திமுக அரசிடம் கிடையாது.

டெல்லி, மோடி எதிர்ப்பு
தமிழகம் உற்பத்தி துறை அல்லது சேவைத் துறையில் முன்னேற வேண்டுமா? வேளாண் துறையில் புரட்சிகர மாற்றங்களை அமல்படுத்த வேண்டுமா? என்பது குறித்தெல்லாம் பார்வை எதுவும் திமுக அரசிடம் இல்லை. மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிற போதும் திமுக அமைச்சர்கள் டெல்லி எதிர்ப்பு, மோடி எதிர்ப்புக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்றனர். என்னதான் முதல்வர் ஸ்டாலின் கடினமாக உழைத்தாலும் அவரது அமைச்சரவை சகாக்கள் குறிப்பாக அவரை சுற்றி இருக்கும் அமைச்சர்களால் பின்னடைவைத்தான் சந்திக்கிறார்.

அதிமுக-சசிகலா குறித்து...
பாஜகவைப் பொறுத்தவரையில் சிலர் தேசிய செயலாளர் பதவியிலும் மாநிலங்களின் பொறுப்பாளர்களாக பொதுச்செயலாளர்களும் இருக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒருமித்த முடிவுடன் இருக்கிறோம். அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம். தமிழக அரசியலில் எதனையும் ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் திரும்பியும் வரலாம். தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தொண்டர்களின் கட்டமைப்பால் உருவானது. தொண்டர்கள் தங்களுக்கு ஒரு தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்தால் அதன்படிதான் நடக்க வேண்டும். சசிகலாவின் சரி, தவறுகள் தொடர்பான எனது தனிப்பட்ட கருத்துகளை நான் தெரிவிக்க முடியாது. அதேநேரத்தில் அதிமுகவின் நல்ல தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தின் நலனுக்காக அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பு தொடர்பாக பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சொல்ல முடியாது. அதேநேரத்தில் சில தரப்பு இது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது.

கொள்கையே இல்லாத திமுக
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இப்போதும் இடம்பெற்றுள்ளது. பாமக-பாஜக இடையே நல்லுறவு நீடிக்கிறது. 2024 லோக்சபா தேர்தல்களை பாமக கவனத்தில் கொள்ளும் என கருதுகிறேன். எதிர்காலத்தில் பாஜகவும் திமுகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. எங்களது இரு கட்சிகளின் சித்தாந்தங்களும் பார்வைகளும் வெவ்வேறானவை. அதனால் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். 1960கள், 1980களைப் போன்ற அரசியல் சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை. இது சோசியல் மீடியாக்கள் காலம். கொள்கைகள்தான் மக்களிடம் எடுபடும். பாஜக தனது கொள்கைகளை முன்னிறுத்துகிறது. திமுகவுக்கோ கொள்கைகளே இல்லை.

ரஜினி வராதது இழப்பே
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனது தமிழக அரசியலுக்கு 100% இழப்புதான். இளைஞர்கள், படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில் 2 முக்கியமான உரைகளை ரஜினிகாந்த் நிகழ்த்தி இருந்தார். திமுகவைப் பொறுத்தவரையில் அதன் வாக்கு வங்கி 33.5% மட்டுமே. அதாவது 67% பேர் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர் என்பதை இதுகாட்டுகிறது. அதிமுகவின் செல்வாக்கை சிதைத்து பாஜக வளர திட்டமிடுவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. உண்மையில் பாஜக தன்னுடைய கொள்கைகளை முன்னிறுத்தியே வளருகிறது. இப்போது திமுகவுக்கு ஓட்டுப் போட்ட 10% நடுநிலை வாக்காளர்கள் இனி பாஜகவுக்கே வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications