நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை அவமதித்து புத்தகம்? மத்திய உள்துறைக்கு பாஜக கடிதம்! போலீசுக்கும் புகார்
சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையிலான புத்தகத்தை விற்பனை செய்ய உள்ள பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை செயலருக்கு பாஜக கடிதம் அனுப்பி உள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சிக்கும் நுாலை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு, தமிழக பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அனுப்பி உள்ள கடிதத்தில், "சென்னை நந்தனத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் 'கீழைக்காற்று' பதிப்பகம் சார்பில் "திருப்பரங்குன்றம் விவகாரம் - ஜி.ஆர்.சுவாமிநாதன்:நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?" என்ற தலைப்பிலான புத்தகம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில், நீதிபதி ஒரு கையில் சூலத்தையும், மறு கையில் காவிக் கொடியையும் ஏந்தியிருப்பது போன்ற கேலிச் சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த பதிப்பகத்துக்கு அரங்கு எண் 172 மற்றும் 173 ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
நீதித் துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் இந்த புத்தகம் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல், தீய எண்ணத்துடன் இந்த அவதூறு பரப்பப் படுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல், இந்திய நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட கீழைக் காற்று பதிப்பகம் மற்றும் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவதூறு பரப்பும் அந்த புத்தகத்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை உடனடியாகத் தடை செய்வதோடு, அந்த பதிப்பகத்தின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து, ஏ.என்.எஸ்பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்ணியத்தின் மீதான ஒரு வெட்கக்கேடான தாக்குதலை நான் எடுத்துக்காட்டுகிறேன். உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் சமீபத்தில், பல நுாற்றாண்டுகளாக வரலாற்று, இலக்கிய மற்றும் சட்ட ஆதாரங்களின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள பண்டைய தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரிய முறையை நிலைநிறுத்தி, நியாயமான தீர்ப்பை வழங்கினார்.
அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் முன்னுதாரணங்களில் வேரூன்றிய இந்த தீர்ப்பு, வேண்டுமென்றே அவதுாறு செய்யப்பட்டுள்ளது. கீழக்கட்டு பதிப்பகம், 'திருப்பரங்குன்றம் விவகாரம் - ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ்., ரவுடியா' என்ற தலைப்பில் நுால் வெளியிட்டுள்ளது. அட்டைப்படம், நீதிபதியை ஒரு கை திரிசூலத்தை பிடித்து கொண்டு, மற்றொரு கை காவி கொடியை பிடித்து கொண்டு, கொடூரமாக கேலிச்சித்திரமாக்குகிறது. இந்த நுால், புத்தக கண்காட்சியில், 172 - 173 அரங்குகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நீதித்துறை நேர்மையை கேலி செய்கிறது. இது, நீதித்துறையை அவமதிக்கிறது. நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications