பஞ்சு சாட்டையா? சோதிச்சு பார்க்கலாம்.. ரெடியா? திமுக கவுன்சிலருக்கு சவால் விட்ட அண்ணாமலை!
சென்னை: சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி பற்றிப் பேசிய வீடியோவை பகிர்ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. மேலும், தான் அடித்துக் கொண்டது பஞ்சு சாட்டை என விமர்சித்த திமுக கவுன்சிலரை அதே சாட்டையை வைத்து சோதித்துப் பார்க்க தயாரா என சவால் விடுத்துள்ளார்.
அண்ணாமலை லேட்டஸ்ட் ட்வீட்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184 ஆவது வார்டு உறுப்பினரும், 14 ஆம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. #ShameOnYouStalin
குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 - 2011 திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர். ஒட்டுமொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை.
பஞ்சு சாட்டையா? அண்ணாமலை சவால்
பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலை கொடூர சம்பவம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாணவர் ஒருவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த வெளி நபர் ஒருவர், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர் நகல் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக விமர்சித்ததோடு, "நான் என்னை 6 முறை சாட்டை அடித்துக்கொள்வேன். இனி திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை என் காலில் செருப்பு அணிய மாட்டேன்." என அறிவித்தார்.
சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை
அதன்படி, அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். பச்சை வேட்டி கட்டி, வெற்றுடம்போடு, தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார் அண்ணாமலை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இநிலையில் தான், திமுக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் எஸ்.வி. ரவிச்சந்திரன் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது பற்றி விமர்சித்துப் பேசியுள்ளார்.
அதற்கு பதிலடியாக அண்ணாமலை, "கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். சாட்டை பஞ்சாயத்து தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications