3 முறை திருமாவை சந்தித்த பாஜக பெரும்புள்ளிகள்? அமைச்சர் பதவிக்கு ரெடி! வாய் திறந்த ஆளூர் ஷாநவாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பாஜகவால் தைரியமாக அறிவிக்க முடியுமா? என்று ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் தனது முதல் மாநில மாநாட்டை நடத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதற்கு இணையாக 'மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாட்டை' நடத்த விசிக திட்டமிட்டு வேலைகளை தொடங்கி உள்ளது. ஒரு காலத்தில் விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது பாமக கடுமையாக அவரை தாக்கியது. அதற்குச் சமமாக விஜயகாந்த் கட்சியை விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்தார்.

aloor shahnawaz vck

அதன்பின்னர் ஒரு கட்டத்திற்குப் பிறகு விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது விசிக. அது மிகப்பெரிய விவாதத்திற்கு வழிவகுத்தது. எனவே இந்த முறை விஜய் கட்சி பற்றி விசிக ஒரு சாஃப்ட் அணுகுமுறையைக் கையாளுகிறது. விசிக தலைவர் திருமாவும் விமர்சிப்பதைத் தவிர்க்கிறார். 2026இல் கூட்டணி இல்லை என்று சொல்ல மறுக்கிறார். விஜய் வளர்ந்து வரட்டும் என்று சொல்கிறார்.

ஆனால், 10% வாக்குகளை அவர் பெறலாம் எனக் கணிக்கிறார். பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி இல்லை எனப் பகிரங்கமாக அறிவிக்க முடிந்த விசிகவினால் விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை எனச் சொல்ல தயக்கம் உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் இல்லை என்று பாஜகவினால் தைரியமாக அறிவிக்க முடியுமா? என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்புகிறார். அப்படி என்றால் திமுகவை இழுக்க பாஜக முயற்சி செய்து வருகிறதா எனச் சந்தேகம் வலுக்கிறது.

இது பற்றி ஆளூர் ஷாநவாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில்,"கட்சி வளர்ந்திருக்கிறது. கடந்த முறையைவிடக் கூடுதலான இடங்களைச் சட்டமன்றத் தேர்தலில் கேட்டுப் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். விசிக வளர்ந்துள்ளது என்பதைப் பலரும் ஒப்புக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் விசிகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால், மற்ற சமூகத்தினர் வாக்குகளைப் பெற முடியாது, கூட்டணி மதிப்பு குலைந்துவிடும் என்று பரப்புரை செய்யப்பட்டது. வதந்தி பரப்பப்பட்டது. இன்று அப்படியில்லை. விசிகவை இணைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம் எனச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பார்வை மாறியுள்ளது.

இன்று விசிக சாதி கட்சி இல்லை என்பதை மக்கள் நடத்திக் காட்டியுள்ளனர். நாகப்பட்டினம் பொது தொகுதியில் நின்று விசிக வெற்றிபெற்றுள்ளது. கடலூர், சிதம்பரம் தாண்டினால் உங்கள் கட்சி எங்கே இருக்கிறது என்று ஒரு காலத்தில் கேட்டனர். இப்போது நாகையில் நின்று வென்றுள்ளோம். 2 பொதுத் தொகுதிகளில் நின்று விசிக வெற்றிபெற்றுக் காட்டியுள்ளது. எனவேதான் விசிகவை தங்களின் பக்கம் இழுத்துவிட்டால் தங்கள் கூட்டணியை வலிமை பெற வைத்துவிடலாம் எனப் பல கட்சிகள் நினைக்கின்றன.

அப்படி இருந்தும் திருமாவளவன், பாஜக, பாமகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் எனச் சொல்லி இருக்கிறார். எந்தக் கட்சி இப்படிச் சொல்லும்? திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக சொல்லுமா? இன்றைக்கு பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது. பலம் இல்லாத அரசாக உள்ளது. 2 எம்பிகளின் ஆதரவு என்பது பாஜகவுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. விசிக ஆதரவு கொடுத்துவிட்டு, ஒரு ஒன்றிய அமைச்சர் கேட்கலாம் என திருமா ஒரு முடிவை எடுக்கலாம் இல்லையா? பாமக என்றால் அப்படித்தானே செய்வார்கள். அப்படி எங்கள் தலைவர் செய்யவில்லையே?

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக எங்களை தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. இப்போது 3 முறை பாஜக தலைவர்கள் திருமாவை சந்தித்து பெரிய பொறுப்புகளை தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் சொல்கிறோம். யாருடன் கூட்டணி என்பதை மட்டும் விசிக சொல்லவில்லை. யாருடன் கூட்டணியே இல்லை என்பதையும் விசிக தெளிவு செய்துள்ளது.

வேங்கை வயல், மேல்பாதி விவகாரம் பிரச்சினையில் ஒரு தீர்வு வரவில்லை என்பதால் திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேற வேண்டும் என சில பேசுகிறார்கள். அந்தப் பிரச்சினைக்காகப் போராடிய ஒரே கட்சி விசிகதான். கூட்டணியிலிருந்தும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எதிர்க்கட்சியாக இருந்து எடப்பாடி பழனிசாமி ஒரு போராட்டம் இதற்காக நடத்தினாரா? பாமக நடத்தியதா? பாஜக நடத்தியதா? நாங்கள் மட்டும் தான் திமுகவை எதிர்த்து நடத்தினோம். வேங்கை வயல், மேல்பாதி பிரச்சினை பற்றி சட்டமன்றத்தை முடக்க நாங்கள் தயார். அதற்காக ஆதரவு தர எடப்பாடி தயாரா? அவர் வாய் திறக்கவே இல்லையே? திமுகவை எதிர்த்துப் போராடி நாங்கள் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம். அதில் ஒரு பிரச்சினைக்குக்கூட எடப்பாடி பழனிசாமி ஆதரவு தரவில்லையே? எதிர்க்கட்சியாக இருக்கும்போது உதவாத அவர் ஆளும் கட்சியாக வந்தால் எங்கள் பிரச்சினையை எப்படி தீர்வு காண்பார்? அவருடன் எப்படி நம்பி கூட்டணிக்குப் போக முடியும்?

விசிக இதுவரை சட்டமன்றம், நாடாளுமன்றம் என மொத்தம் 10 தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். அதில் 7 தேர்தல்களை திமுக கூட்டணியுடன் சந்தித்துள்ளோம். ஒரே ஒருமுறை மட்டும்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஒரு முறை மக்கள் நலக்கூட்டணி. 99 தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்தோம். எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே திமுக கூட்டணி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். திமுகவும் அதைத் தெளிவு செய்துள்ளது" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+