முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!
சென்னை: சென்னை கானத்தூர் அடுத்த பனையூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வீடு அமைந்துள்ள நிலையில், அதன் அருகே உள்ள ஒரு காலி மைதானத்தில் ரத்தக் காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பனையூர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக கானத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கானத்தூர் போலீசார், உடலைக் கைப்பற்றி முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் அல்லது எதற்காக பனையூர் பகுதிக்கு வந்தார் போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் இல்லம் இருக்கும் வி.ஐ.பி பகுதி என்பதால், இந்த விவகாரத்தை போலீசார் மிகவும் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.
சடலத்தின் உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் அந்த காலி இடத்திற்கு வந்து சென்றார்களா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகள் தற்காலிகமாக பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை விவரங்கள் முழுமையாகத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பனையூர் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications