இன்னும் கொஞ்ச நேரத்துல வெடிக்கும்.. நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரத்த போலீசார்
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் பிரபு வீட்டை சோதனையிட்டதில் அது புரளி என தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடு மற்றும் அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் அந்த மிரட்டல் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டை சோதனையிட்டதில் அது புரளி என தெரியவந்துள்ளது.
மேலும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படைப்பிரிவினர் நடத்திய சோதனையில் அந்த வெடிகுண்டு மிரட்டலும் புரளி என தெரியவந்தது.
முன்னதாக நேற்று (அக்டோபர் 28) நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி மர்ம நபர்கள் மெயில் அனுப்பியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications