ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. சல்லடை போட்டு தேடிய வெடிகுண்டு நிபுணர்கள்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள அவரது வாடகை வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனிடையே டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது.
இதன் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அவரது வீட்டு வாசலில் மெட்டல் டிடக்டர் வசதியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இ-மெயில் மூலம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் வீடுகளில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications