திடீரென பிரச்சார வாகனத்தில் ஏறி விஜய் முகத்துக்கு முன் வந்த சிறுவன்.. இழுத்துப்போட்ட பாதுகாவலர்கள்
புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய்யின் வாகனத்தை அவரது ரசிகர்கள் பைக்கில் விரட்டினர். திடீரென பரப்புரை வாகனத்தில் ஏறிய சிறுவனால் விஜய் பதறினார். காரில் ஏறிய சிறுவனை பாதுகாவலர்கள் இழுத்துப் போட்டனர்.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பு மனுத் தாக்கலை முடித்து விட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

புதுச்சேரியில் கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் அழைப்பு விடுத்திருந்தது. மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் முன் வராததால், தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கி உள்ளது.
சமீபத்தில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள புதுச்சேரி காவல்துறை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. மேலும் தவெக சார்பில் 23 இடங்களில் பரப்புரை நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் 4 இடங்களில் மட்டும் விஜய் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, பரப்புரைக்காக சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரி புறப்பட்டார். அப்போது,ஈ.சி.ஆர். சாலையில் புதுச்சேரி நோக்கி செல்லும் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை மறித்து கார் மீது அக்கட்சி தொண்டர்கள் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில இளைஞர்கள் விஜய் சென்ற கார் மீது ஏறினர். அவர்கள் கார் மீது அமர்ந்து கொண்டும், காரின் மீது படுத்துக்கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது விஜய்யோடு வந்த பவுன்சர்கள் அவர்களை கார் மீதிருந்து கீழிறக்கி அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டங்களுக்கும், பரப்புரைகளுக்கும் செல்லும் போது அவரது வாகனத்தை பின் தொடர்வது, வாகனத்தின் மீது ஏறி கூச்சலிடுவது, மரத்தின் மீது ஏறுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றனர். விஜய் கேட்டுக்கொண்டும், அவரது வாகனத்தை தவெக கட்சியினர் தொடர்வது நடந்தேறி வருகிறது. விஜய் பேச்சை அவரது தொண்டர்களே மதிப்பதில்லை என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
தவெக தலைவர் விஜய்யை மிக அருகில் பார்க்க வேண்டும் என்ற உற்சாகத்தில் கட்டுப்பாட்டை மீறி, கார் மீது ஏறுவது போன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபடுவது தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாதுகாப்பு இன்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களிடம் பொதுமக்கள் எதிர்பார்ப்பது.












Click it and Unblock the Notifications