கோவை கல்லூரி மாணவியை தூக்கி சென்று நாசம் செய்த கொடூரம்.. இதுதான் அப்பா மாடல் அரசா? கொந்தளித்த தவெக
சென்னை: கோவை விமான நிலையம் அருகே மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியை தூக்கி சென்று 3 காமுகன்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என தமிழக வெற்றிக் கழகம் ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கார் அருகே நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்.

7 தனிப்படை அமைத்த போலீசார்
அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென ஆண் நண்பரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையே படுகாயத்துடன் மயங்கி கிடந்த ஆண் நண்பர் அதிகாலையில் கண்விழித்த பிறகு நடந்ததை கூறி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி மற்றும் ஆண் நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை கண்டனம்
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கூட காவல்துறையினர் போதிய கண்காணிப்பு, விழிப்புணர்வுடன் இல்லாததே இதற்கு காரணம். பாலியல் வன்கொடுமையை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் முழு மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும்" இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா கண்டனம்
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி, நேற்று ஞாயிறு இரவு, கோவை விமான நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.
பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளது.
போதைப் பொருள் பயன்பாடு
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுவெளியில் அவர்கள் அச்சமின்றி பயணிக்கின்ற பாதுகாப்பான சூழலை ஒரு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கடமை. ஆனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றச் செயல்களுக்குக் காரணமாக, பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமான மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அப்பா மாடல் அரசு
தமிழக வெற்றிக கழக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், "பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி.
போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இந்த போலி 'அப்பா' மாடல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் முறையாக எடுக்காத காரணத்தால், போதையின் பாதையில் சென்ற அந்த கூட்டம் நேற்று (2-11-2025) இரவு கோவை மாநகர் விமானநிலையம் ஒட்டியுள்ள பகுதியில், தனியார் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது!
தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத தி.மு.க., அரசு வெட்கப்பட வேண்டும்! குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றுகிறார்கள், ஏனெனில் முதல்வரின் இரும்புக் கை, தமிழ்நாட்டு மகள்களை அல்ல... தி.மு.க. அறிவாலய அமைச்சர்களை அமலாக்கத்துறையில் இருந்து காப்பாற்ற தான் பயன்படுகிறது.. தி.மு.க., ஆட்சி அராஜகம் செய்பவர்களுக்கான ஆட்சி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications