அடடே சூப்பர்! சென்னை உட்பட இந்த 7 மாநகராட்சியில் இலவச வைஃபை! அமைச்சர் பிடிஆரின் சரவெடி அறிவிப்பு
சென்னை ,மதுரை ,கோவை ,ஆவடி உள்ளிட்ட 7 மாநகராட்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும்
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் இன்று தாக்கல் செய்தார். அதில் சென்னை ,மதுரை ,கோவை ,ஆவடி உள்ளிட்ட 7 மாநகராட்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.
இதனிடையே இன்று திமுக அரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் பிடிஆர்
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. அமைச்சர் பிடிஆர் காலை 10 மணிக்குத் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கூறுகையில், "மின்னணு முறையில் நேரடியாகவும் எளிமையாகவும் வெளிப்படையாகவும் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக simple gov என்ற முயற்சியை அரசு தொடங்கும்.

தமிழக அரசு
அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் துறைகளின் நடைமுறைகளையும் சேவைகளையும் கணினிமயமாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மென்பொருள் குறிப்பிட்ட காலத்திற்குள் உரியத் தரநிலையுடன் உருவாக்க 100 கோடி மதிப்பில் மின் ஆளுகை நிதி ஏற்படுத்தப்படும். இந்த நிதி அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் மின் ஆளுகைக்குப் பயன்படுத்தப்படும்.

அதிவேக கண்ணாடி இழை தொடர்பு
ஒருங்கிணைந்த மின்னணு கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் அதிவேக கண்ணாடி இழை தொடர்பு உருவாக்கப்படும். இதற்காக ரூ 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி இணையதள வசதி ஏற்படுத்த இது பயன்படும். இன்றைய இணைய உலகில் தகவலை ஆற்றலுக்கும் அதிகாரத்திற்கும் அடித்தளமாக உள்ளது.

7 நகரங்களில் இலவச வைஃபை
இந்த அரசின் சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டத் தகவல்களையும் வாய்ப்புகளையும் நிலைநாட்டவும் தகவல்களையும் வாய்ப்புகளையும் பரவலாக்கி அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவது அவசியமாகும். எனவே, சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும்" என்றார்.

டெல்லி
ஏற்கனவே டெல்லியில் இதுபோல பொது இடங்களில் வைஃபை வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. இப்போது தமிழ்நாட்டிலும் முதற்கட்டமாக இந்த ஏழு நகரங்களில் வைஃபை வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். இது வரும் காலங்களில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications