மகளிருக்கு பஸ் ப்ரீயா? அசந்துபோன வெளிநாட்டுக்காரர்! டி.ஆர்.பி.ராஜா போட்ட ட்வீட்!
சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்காக இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்பட்டு வருவதை அறிந்த வெளிநாட்டு யூடியூப்பர் ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார். அந்தக் காணொளிப் பதிவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை 2024 மே மாதம் நடைமுறைப்படுத்தியது. அதற்காக அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து மே 8 ஆம் தேதி இது செயல்பாட்டிற்கு வந்தது. இந்தத் திட்டத்திற்காக 7 ஆயிரத்து 321 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரத்து 876 லட்சம் பெண்கள் பயணம் செய்துவருகின்றனர். ஏப்ரல் மாத இறுதிவரை சுமார் 115 கோடிப் பெண்கள் பயணம் செய்துள்ளதாக ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.1,500 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவரது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவை ஷேர் செய்து 'இதுதான் திராவிட மாடல்' என்று புகழ்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு வெளிநாட்டு விலாக்கர் தமிழ்நாடு தொடர்பாக ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் அமர்ந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும், 'இங்கே நிறையப் பெண்கள் அமர்ந்துள்ளனர்' என்று வியக்கிறார் அந்த விலாக்கர்.

அதற்கு அங்கே அமர்ந்துள்ள பெண்கள், 'பேருந்துக்காகக் காத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம். கட்டணம் கிடையாது' என்கின்றனர். அதற்கு அந்த வெளிநாட்டுக்காரர், 'நிஜமாகவா சொல்றீங்க? பஸ் பயணம் இலவசமா?' என்று வாயைப் பிளக்கிறார். உடனே அங்கே அமர்ந்திருந்த பெண் ஒருவர், 'ஆமாம். பெண்களுக்கு மட்டும் இலவசம். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் அரசு இந்தத் திட்டத்தைச் செய்துள்ளது' என்கிறார்.
உடனே அவர், தனது பார்வையாளர்களுக்கு விளக்கும்விதமாக இங்கே அமர்ந்துள்ள அனைவரும் தமிழ்நாட்டுக்காரர்கள். இங்கே பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிறார். மீண்டும் பெண்களிடம் எதற்காக இலவசம் தரவேண்டும்? என்று வினவ, 'பெண்களை ஊக்குவிப்பதற்காகத்தான் இதைக் கொடுத்துள்ளது அரசு. பெண்கள் முன்னேற்றம் தான் காரணம்' என்கிறார்.

அதைக் கேட்டிருந்த அந்த வெளிநாட்டுக்காரர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்பட்டு வருகிறது என அறிகிறேன். இது ஒரு புத்திசாலித்தனமான யோசனை என்றும் அவர் பாராட்டியுள்ளார். அமைச்சர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோவுக்கான பின்னூட்டங்களில் பலர் ஆதரித்தும் சிலர் திமுகவை விமர்சித்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாகக் குற்றச்செயல் அதிகம் நடப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் எனப் பலர் முறையிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்த விலாக்கர் யார் எனத் தேடிப் பார்த்தோம். இவர் Mike Okay என்ற பெயரில் ஒரு யூடியூப் நடத்தி வருகிறார். அதைக் கொண்டு பார்க்கையில் இவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபன் என்று தெரிகிறது. சில மாதங்கள் முன் மதுரை, கம்பம், திருநெல்வேலி, ராமேஸ்வரம் எனப் பல ஊர்களை அவர் சுற்றிப் பார்த்துவிட்டு, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தனது பயணம் பற்றி பதிவில் Mike 5 மாத திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மதுரையில் அவர் பரோட்டா மற்றும் கொத்து பரோட்டாவைச் சுவைத்து உண்ணும் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட இவரை 73 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.
அதன்பின்னர், இவர் ஆந்திரா சென்றுள்ளார். அங்கே ராஜமுந்திரி சென்றுள்ளார். பின் கடற்கரையில் உள்ள படகு மூலம் உள்ளே இலங்கைப் போக எவ்வளவு கட்டணம் என்று கேட்கிறார். அப்போது போகவர 500 ரூபாய் என்கிறார்கள். அவர் போவது இலங்கை இல்லை. உள்ளே சுற்றிக் காட்ட அழைத்துப் போகிறார்கள். மொழி புரியாததால் அவர் இலங்கை செல்வதாக நினைத்துப் போகிறார். அந்த ஊர் மக்களைப் பார்த்து இது தெலுங்கு மொழி என்று தனது பார்வையாளர்களிடம் விளக்கம் அளிக்கிறார்.












Click it and Unblock the Notifications