"ரூ.1000" உரிமைத் தொகை.. இப்படித்தான் கிடைக்குமா? உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? இன்று முகாம் இருக்கு
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான அதிரடியை துவங்கிவிட்டது.. இது தொடர்பாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை பாருங்கள்.
பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது..
ஆயிரம் ரூபாய்: தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.. இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன..

இந்த உரிமைத்தொகையை அரசு எதன்மூலம், எப்படி தரப்போகிறது? நேரடியாகவே வங்கிக்கணக்கு உரிமைத்தொகை சென்றுவிடுமா? என்றெல்லாம் சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள். இதுகுறித்து சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் 10 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தன.
அதாவது, மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றனர்... அந்த கடனை தவணை வாரியாகவும் செலுத்தி வருகிறார்கள்.. உரிமை தொகையை, அந்த வங்கி கணக்கில் செலுத்தினால், கடனுக்கான தவணையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.. பல வங்கிகள், குறைந்தபட்ச இருப்பை (மினிமம் பேலன்ஸ்) கட்டாயமாக்கி இருக்கிறார்கள்.
வங்கிக்கணக்கு: அப்படி இருக்கும்போது இந்த உரிமைத்தொகையை, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தினால், அரசின் திட்டம் மக்களை சென்றடையாது.. பிரபலமும் அடையாது.. இதுவே பெண்களின் கைகளில், அந்த உரிமைத்தொகையை கொடுத்தால், திமுகவுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்றும் அந்த கட்சியினர் வலுவாக நம்புகிறார்களாம்.
அதனால்தான், மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, தமிழ்நாடு அரசு நினைக்கிறதாம். அதன்படி, கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும், உரிமைத்தொகை செலுத்தப்படும்... அதன் ஊழியர்கள், "மைக்ரோ ஏடிஎம் "எனப்படும் கையடக்க கருவி மற்றும் பண பெட்டகத்துடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு மாதம்தோறும் செல்வார்கள்.

எதிர்பார்ப்பு: அந்த கருவியில் பயனாளிகளின், ஆதார் கார்டு நம்பர் உள்ளிட்ட விபரங்கள், ஏற்கனவே பதிவாகி இருக்கும். அவர்கள் விரல் ரேகை பதிவு செய்து அல்லது, டெபிட் கார்டு பயன்படுத்தி உரிமைத்தொகை பணத்தை பெறலாம். இதை செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
இதனால், இன்னொரு சந்தேகமும் அப்போது கிளம்பி உள்ளது.. ரூ.1000 உரிமைத்தொகையை ரேஷன் கார்டு மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுமா? என்பதே அந்த சந்தேகம்..
குழப்பம்: இந்த உரிமை தொகை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டால் EMI உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிகளில் இருந்து அந்த பணம் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். அதேசமயம், ரேஷன் கார்டு வழியாக ரேஷன் கடையிலேயே பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டால், அதிலும் கூட பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என்பதால், இதையெல்லாம் அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு, முக்கிய அதிரடி ஒன்றை மேற்கொண்டு வருகிறது.. குடும்பத்தில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில் குடும்ப தலைவி பெயரில் அஞ்சல்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, நேற்றையதினம், சேலம் மாவட்டத்தில் முகாம் நடத்தப்பட்டது..
செல்லக்குட்டிகாடு, சாமியப்பா நகர், நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, நாட்டாமங்கலம், காட்டூர், அரசமரத்துகாட்டூர், தம்மநாயக்கன்பட்டி, மல்லுார் பகுதிகளில் அஞ்சல் கணக்கு தொடங்க முகாம் நடந்துள்ளது..
இன்றும் முகாம்: இந்நிலையில், இன்றைய தினமும், முகாம்கள் நடக்கின்றன.. குறிப்பாக, அ.கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி, வாழக்குட்டப்பட்டி, மல்லுார், மூக்குத்திபாளையம், திப்பம்பட்டி, திப்பம்பட்டி, அம்மாபாளையம் பகுதிகளில் இந்த முகாம் நடக்க உள்ளது.. இதற்கு அடுத்தபடியாக, வருகிற 19ம் தேதி முகாம் நடக்க போகிறது.
சந்தியூர், கம்மாளப்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, குள்ளப்பநாயக்கனுார், பனமரத்துப்பட்டி, ஒட்டியூர், தாசநாயக்கன்பட்டி, எருமாபாளையம், சன்னியாசிகுண்டு பகுதிகளில் முகாம்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அதுபோலவே, வரும் 20ம் தேதி, ஆட்டையாம்பட்டி, பெரமனுார், வேங்கம்பட்டி, தீரானுார், மேட்டுத்தெரு, ஜி.கே.கரட்டூர், எருமாபாளையம், அ.கொண்டலாம்பட்டி, எருநாயக்கன்பாளையம், தும்பல்பட்டி ஆகிய இடங்களில் முகாம் நடக்க உள்ளது.
மகிழ்ச்சி: தேவைப்படும் நுகர்வோர், முகாமை பயன்படுத்தி, அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. செப்டம்பர் மாதம் துவங்குவதற்குள், இந்த முகாம்களை மாவட்டங்களில் நடத்திவிடுவது என்ற முனைப்பில் தமிழக அரசு தீவிரமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications