இடைத்தேர்தல் ‘ட்விஸ்ட்’.. கூட்டணியே தலைகீழாக காரணமான எம்ஜிஆரின் முடிவு.. திருப்பத்தூர் ‘திருப்பம்’!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தல்கள் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்தவகையில் 1981ல் திருப்பத்தூரில் நடந்த இடைத்தேர்தல், கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆளும் தவெகவின் சீனிவாச சேதுபதி வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது. சுவாரஸ்யமாக, 40 ஆண்டுகளுக்கு முன்பும் இதே திருப்பத்தூர் தொகுதி விசித்திரமான காரணங்களுக்காகத் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.

By Election 1981 Poll That Triggered a Major Political Alliance Shift

காங்கிரஸ் - திமுக

1980 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது இந்திரா காங்கிரஸ். இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இந்திரா காந்தி பிரதமர் ஆனதும், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சியைக் கலைக்கும் கோரிக்கைகள் எழுந்தன.

பல்கேரியா நாட்டில் இருந்து கப்பல் வாங்குவதற்காக எம்ஜிஆர் ஊழல் செய்ததாக திமுக குற்றம்சாட்டியது. 1980 பிப்ரவரி 17 அன்று டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாடு உள்ளிட்ட ஒன்பது மாநில அரசுகளைக் கலைப்பதாக அறிவித்து விட்டனர். ஆட்சிக் கலைப்பு மக்கள் மத்தியில் எம்ஜிஆர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.

அதிமுக வெற்றி

சட்டமன்றத் தேர்தலின்போது, ​​இந்திரா காங்கிரஸ், திமுக மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை ஓர் அணியாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காந்தி-காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், அகில இந்திய பார்வர்ட் பிளாக், மற்றும் லோக் தளம் போன்ற சிறிய கட்சிகளை உள்ளடக்கிய 11 கட்சிகள் கொண்ட கூட்டணியை அதிமுக தலைமையேற்று வழிநடத்தியது.

இந்தக் கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லிம் லீக், அகில இந்திய முஸ்லிம் லீக், குடியரசுக் கட்சி (கவாய்) மற்றும் உழைக்கும் மக்கள் மன்றம் போன்ற ஒப்பீட்டளவில் குறைவாக அறியப்பட்ட கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 129 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 33 இடங்களையும் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முயன்ற எம்ஜிஆர்

1980 ஜூன் மாதம் எம்.ஜி.ஆர் தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தைத் தொடங்கியபோது, ​​ஆரம்பத்தில் அவருக்கு நிலைமை அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. ஏனெனில், அவர் அப்போதைய வலிமைமிக்க பிரதமர் இந்திரா காந்தியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மத்தியில் அதிமுகவுக்கு எதிரான திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

எம்ஜிஆர் மத்திய அரசுடன் இணக்கமாகப் போக விரும்பினார். ஆனால், எம்ஜிஆர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடைபெற்றதாக, திமுக, காங்கிரஸ் எம்.பிக்களும், ஜனதா கட்சி எம்.பியான சுப்பிமணியன் சுவாமியும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

காங்கிரஸ் அப்செட்

முன்னதாக சிக்மகளூர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, அவையின் உரிமையை மீறியதாகக் கூறி டிசம்பர் 1978-ல் மக்களவை எம்.பி பதவியை இழந்த இந்திரா காந்தி, எதிர்க்கட்சியில் இருந்தபோதே மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையத் தீவிரமாக முயன்று வந்தார். மே 1979-ல், தஞ்சாவூரில் தனது தலைவரைப் போட்டியிட வைக்கத் தயாராகிக் கொண்டிருந்த காங்கிரஸ் (இந்திரா) கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அதிமுக அறிவித்தது.

12 வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்தத் தேர்தலில், திமுகவின் நெருங்கிய போட்டியாளரான அன்பில் பி. தர்மலிங்கத்தை 92,848 வாக்குகள் என்ற பெரும் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஜூன் 18, 1979 அன்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் எஸ். சிங்காரவடிவேல் (இந்திரா காங்கிரஸ்) வெற்றி பெற்றார். பின்னர், முன்னாள் பிரதமர் அத்தொகுதியில் போட்டியிடும் யோசனையில் எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. இதனால் அதிகம் அறியப்படாத எஸ். சிங்காரவடிவேலுவை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்தது.

எம்ஜிஆரின் இரண்டாவது இன்னிங்ஸ்

அதிமுகவின் ஆதரவுடன் தஞ்சாவூரில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. செப்டம்பர் 1979-ல், 1980 மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் காங்கிரஸும் திமுகவும் கூட்டணி அமைத்தன. நாடாளுமன்றத் தேர்தலில் இருவரும் அமோக வெற்றி பெற்றிருந்தாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிடம் சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்தனர்.

இத்தகைய பின்னணியில்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகத் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். 1981-84 காலகட்டத்தில் அப்போதைய பிரதமரின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய மூத்த அரசு அதிகாரியும், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் ஆளுநருமான பி.சி. அலெக்சாண்டர், 'My Years With Indira Gandhi' என்ற தனது நினைவுக் குறிப்பு நூலில், இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு குறித்து ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

எம்ஜிஆர் - இந்திரா காந்தி

1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-12, தேதிகளில் பிரதமர் சென்னைக்கு வருகை தந்திருந்தபோது, ​​விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் காரில் தன்னுடன் வருமாறு எம்.ஜி.ஆரை அவர் அழைத்ததை அலெக்சாண்டர் நினைவு கூர்ந்தார். "அதன்பிறகு நடந்த உரையாடல் சுமுகமாக இல்லை. எம்.ஜி.ஆரின் அமைச்சரவை சகாக்கள் தன் மீது நடத்திய கடுமையான தாக்குதல்கள் குறித்து இந்திரா காந்தி மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்... இந்திரா காந்தி மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார்.

ராஜ்பவனில், பிரதமர் இந்திராவின் பேச்சுத் தொனி மற்றும் அணுகுமுறை குறித்து முதலமைச்சர் எம்ஜிஆர் அலெக்சாண்டரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். பிரதமர் இந்திரா காந்தியின் அதிருப்தியை எதிர்கொண்ட போதிலும், அவருடனான உறவை மீண்டும் சீரமைப்பதற்கான முயற்சிகளை முதலமைச்சர் எம்ஜிஆர் கைவிடவில்லை.

திருப்பத்தூர் இடைத்தேர்தல்

இந்தச் சூழலில் தான் திருப்பத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. டிசம்பர் 1980-இல் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வால்மீகி காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியானது. அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

முந்தைய தேர்தலில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. வால்மீகி என்பதால், மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்கள். அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணியின் சார்பாக யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இடைத்தேர்தல் என்றாலே மாநிலத்தில் ஆளுங்கட்சிகளே வெற்றி பெறும் நிலை இருந்ததால், அதிமுக போட்டியிட வேண்டுமென முதலமைச்சர் எம்ஜிஆரிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

திடீர் திருப்பம்

திருப்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக அருணகிரி அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கியது. சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட ஏழு கட்சிகள் நவம்பர் 4 அன்று சென்னையில் கூடி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.ஆர்.சண்முகத்தை முதலமைச்சர் எம்ஜிஆர் ஆதரிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், திடீர் திருப்பமாக, இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் முதலமைச்சர் எம்ஜிஆரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சென்னை வந்த மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் கூட்டணிக் கட்சியான திமுகவை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது என்று அறிவித்தார்.

எம்ஜிஆர் எடுத்த முடிவு

திமுகவுக்கும், காங்கிரசுக்கும் சட்டமன்றத் தேர்தலோடு இருந்த உறவு முடிந்துவிட்டது, இது இடைத்தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் கூறினார். இதற்கிடையில் அக்டோபர் 31 அன்று தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் திடீர் பயணமாக டெல்லி சென்றார். பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள்.

மதுரையில் கூடிய அதிமுக செயற்குழு, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவும் முடிவு செய்தது. அதற்கான காரணமாக அக்கட்சி குறிப்பிட்டது இதுதான்: நீதிமன்றத் தீர்ப்புகளால் ஏற்படும் காலி இடங்களைத் தவிர, மற்ற நிகழ்வுகளில் முந்தைய தேர்தலில் அந்தத் தொகுதியைக் கைப்பற்றிய கட்சியையே ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் எம்ஜிஆரின் முன்னிலையில் மின்சாரத் துறை அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் இந்த அறிவிப்பை வாசித்தார்.

ஆதரவு கேட்காமலேயே பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்

ஆனால், பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரி எம்.ஜி.ஆரை முன்னதாகவே சந்தித்திருந்த சிபிஐ-யின் ஆர். நல்லகண்ணு, டி.என்.கே.சி-யின் பி. நெடுமாறன் மற்றும் ஜி.கே.என்.சி-யின் குமரி ஆனந்தன் ஆகியோர் இந்த அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்தனர்.

ஆதரவு கேட்காமலேயே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அருணகிரிக்கு ஆதரவாக அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் பரப்புரை செய்தார். காங்கிரஸ் கட்சியின் பிரச்சார மேடையில் ஏறாமல் வேன் மூலமாக திருப்பத்தூர் தொகுதியைச் சுற்றி வந்து பிரச்சாரம் செய்தார்.

கருணாநிதி முடிவு

இந்த சமயத்தில்தான் திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாகத் தனது கட்சியின் முடிவை அறிவித்தார். இந்த முடிவு கட்சியின் செயற்குழுவால் எடுக்கப்பட்டது. இருப்பினும், தானோ அல்லது திமுக கட்சித் தொண்டர்களோ அந்த வேட்பாளருக்காக சுயமாக முன்வந்து பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்றும், அழைப்பு விடுக்கப்பட்டால் மட்டுமே திமுக காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அன்றைய திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் முந்தைய வாரம் மதுரைக்குச் சென்றிருந்தாலும் திருப்பத்தூருக்குச் செல்லவில்லை.

அருணகிரி அந்த இடைத்தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றார். ஜனதா கட்சி வேட்பாளர் சுமார் 17,600 வாக்குகளைப் பெற்ற நிலையில், அருணகிரி சுமார் 42,000 வாக்குகளைப் பெற்று வென்றார். சிபிஐ வேட்பாளர் 11,515 வாக்குகளைப் பெற்றார்.

கூட்டணிக்கு அச்சாரம்

அப்போதைய மத்திய வேளாண் துறை இணையமைச்சரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.வி. சுவாமிநாதன், எம்.ஜி.ஆரைப் பாராட்டினார். ஆனால் தி.மு.க-வின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்தார். திமுக தலைமை அளித்த உறுதிகளுக்கு மாறாக, திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த பல கட்சித் தொண்டர்களும் உறுப்பினர்களும் ஜனதா கட்சி வேட்பாளருக்காகவே பணியாற்றினர்.

எம்.ஜி.ஆர் ஆரம்பத்திலேயே கணித்திருந்த அரசியல் அணிமாற்றம் அப்போது ஆரம்ப நிலையிலேயே இருந்தது. 1984 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. இந்தக் கூட்டணிக்கு அச்சாரம் அமைத்தது திருப்பத்தூர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் எடுத்த முடிவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+