வரலாற்று சாதனை நாயகர் அண்ணா..54வது நினைவு நாள்..பிரம்மாண்ட பேரணி..முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் தளபதி. பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான்.
பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து "திராவிட முனேற்ற கழகம்" என்ற தனி கட்சி கண்டார். இருந்த போதிலும் பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார்.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த 'கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்' என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, 'தமிழக அரசு' என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த 'சத்யமேவ ஜயதே' என்ற வடமொழி வாக்கியம், 'வாய்மையே வெல்லும்' என்று தமிழில் மாறியது.

கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்திவந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்ற முயன்றது அண்ணாவின் கட்சி. 'ஆகாஷ்வாணி' என்ற வார்த்தைக்குப் பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.
படி அரிசித் திட்டம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாய்மொழி வாக்குறுதிதான் என்றாலும், 15.5.1967ஆம் நாளில் படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார் அண்ணா. 27.6.1967ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது அண்ணாவின் அரசு.
வாழும்போதும் சரித்திர நாயகனாக வாழ்ந்த அண்ணா தன் இறப்பிலும் ஒரு சாதனையை படைத்தவர். அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1970 ம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான " கின்னஸ் ".
அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் திமுக, அதிமுக தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் பேரணியில் பங்கேற்றனர். அமைதி பேரணியானது வாலாஜா சாலையில் தொடங்கி காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில் நிறைவடைந்தது. பேரணியின் நிறைவாக அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications