தொழில்துறை டூ சமூகநலத்துறை.. அமைச்சர் கீர்த்தனா இலாகா மாற்றமா? லண்டன் டிரிப்புக்கு பின் விஜய் முடிவு
சென்னை: சட்டசபைக் கூட்டத்தொடருக்கு பின் முதல்வர் விஜய் லண்டன் செல்லும் சூழலில், மீண்டும் சென்னை வந்த பின் அமைச்சரவை மாற்றம் செய்ய உள்ளார். அதேபோல் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றத்தையும் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபைக் கூட்டதொடர் செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன்பின் செப்டம்பர் 10ஆம் தேதி முதல்வர் விஜய் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் பயணிக்க உள்ளார். பிரிட்டனில் இருந்து முதல்வர் வந்த பின், பல்வேறு அதிரடி சம்பவங்கள் நடக்க உள்ளது. அதாவது தவெக அமைச்சர்களின் 100 நாள் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் விஜய் டேபிளில் இருக்கிறது.

இதனை பார்த்து டென்ஷனான விஜய், 3 பேரை அமைச்சரவையில் இருந்து நீக்கவுள்ளார். அந்த லிஸ்டில் ஜெகதீஸ்வரி, விஜய் பாலாஜி மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் இருக்கின்றனர். இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இந்த சூழலில் அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
முதற்கட்டமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமைச்சர் கீர்த்தனாவை பதவி நீக்கம் செய்யலாம் என்ற கருத்தில் விஜய் இருந்துள்ளார். ஆனால் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரின் ஆதரவு காரணமாக கீர்த்தனாவுக்கு இலாகா மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறையில் இருந்து விடுவித்து, அவர் வசம் சமூக நலத்துறை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் நிதித்துறையை சமாளிக்க முடியாமல் அமைச்சர் மரிய வில்சன் திணறுவதால், அமைச்சர் ராஜ்மோகனிடம் அதனை ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் தொழில்துறையை அமைச்சர் மரிய வில்சன் வசம் ஒப்படைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
ராஜ்மோகனிடம் நிதி மற்றும் முதல்வர் வசம் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவரிடம் இருக்கும் பள்ளிக்கல்வி துறை மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறையை பிரித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வேளச்சேரி குமார் வசம் பள்ளிக்கல்வித்துறையையும், செய்தி மற்றும் விளம்பரத்துறையை அமைச்சர் ரமேஷ்-க்கு கூடுதலாக வழங்கவும் பேச்சுகள் நடக்கின்றன.
இன்னொரு பக்கம் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வசம் வனத்துறையை கூடுதலாக அளிக்கவும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதனால் லண்டனில் இருந்து முதல்வர் விஜய் வந்த பின் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் அமைச்சர்கள் இப்போதே தவெக மேலிடத்தில் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
