"ஊசலாட்டம்".. எடப்பாடி பழனிசாமியின் திடீர் முடிவு.. கூட்டணியில் இணைக்கும் 3 கட்சிகள்.. மலருமா தாமரை?
சென்னை: அதிமுக - பாஜக இடையே கூட்டணி விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. ஆனால், சில யூகங்களும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் புதிதாக அமைய போகும் கூட்டணி குறித்து வட்டமடித்து கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, கூட்டணி தொடர்பாக அமித்ஷாவிடம் பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மாநில தலைவர் என்ற முறையில் தன்னை அழைக்கவில்லை, தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்ற அதிருப்தி அண்ணாமலைக்கு இருப்பதாக சொல்கிறார்கள்..

அதனாலேயே அதிமுக - பாஜக அதிருப்தி அதிகமாகிவிட்டதாகவும், இந்த ஒரு வார காலமாகவே அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்க இதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
கூட்டணி நீடிக்குமா: இதற்குபிறகுதான், அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை என்று ஜெயக்குமார் மூலம் அறிவிப்பை வெளியிட செய்தாராம் எடப்பாடி பழனிசாமி.
பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறது. பாஜக மேலிடத்தை பகைத்து கொள்ள அதிமுகவும் விரும்புவதாக தெரிகிறது. எனினும், பாஜக மாநில தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஒரு வருட காலமாகவே அதிமுக முன்வைத்து வருகிறது. பலமுறை இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுத்து சொல்லியும், பாஜக தலைவர்கள் இதற்கு இசையவில்லை என்கிறார்கள். இப்போது கூட்டணி குழப்பமும் அதிகமாகிவிட்டதால், கையை பிசைந்து நிற்கிறது அதிமுக.
அப்பாயின்மென்ட்: இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்து இதுகுறித்து பேச வேண்டும் என்பதற்காக, மூத்த தலைவர்கள், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ரகசியமாக டெல்லி சென்றார்களாம்.. அமித்ஷாவை சந்திக்க அப்பாயின்மென்ட் தரவில்லையாம்..
"கனடா விஷயத்தில் பிஸியாக இருப்பதால், கூட்டணி குறித்து எடப்பாடியிடம் பேசிக்கொள்வதாகவும், வேறு ஏதாவது பேச வேண்டுமானால், இப்போதைக்கு அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றும், அமித்ஷா தரப்பிலிருந்து மெசேஜ் வந்ததாம்.. இதனால், ஏமாற்றமடைந்த அதிமுக தலைவர்கள், பியூஸ் கோயலை சந்திக்க சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் பிரதமருடன் இருந்ததால், அவரையும் சந்திக்க முடியாமல் போய்விட்டதாம்.
அண்ணாமலை: அமித்ஷாவுடன் ஆலோசித்து விட்டு தகவல் தெரிவிக்கிறேன் என்று பியூஸ் கோயலும் மெசேஜ் பாஸ் பண்ணியுள்ளார். இதனால், ஏமாற்றமடைந்த அதிமுக தலைவர்கள், "அண்ணாமலை இருந்தால் கூட்டணி கிடையாது" என்று மட்டும் விஷயத்தை டெல்லியில் பாஸ் செய்துவிட்டு அதிமுக தலைவர்கள் திரும்பிவந்துவிட்டார்களாம்.
இதற்கெல்லாம் பின்னணியில் விஷயம் இல்லாமல் இல்லை.. அதிமுகவுடன் விசிக, காங்கிரஸ்இரு கட்சிகளுமே கூட்டணி வைக்க விரும்புவதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தையும் மறைமுகமாக துவங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. திமுகவுடன்தான் கூட்டணி என்பதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்தாலும், மற்ற சில தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணிக்கு விரும்புகிறார்களாம்..
திமுக கூட்டணி: இன்று தமிழகத்தில் வாக்குகளை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாக விசிக திகழ்கிறது.. அதற்கான முக்கியத்துவமும், அரசியல் களத்தில் பெருகி வருகிறது. தற்சமயம் திமுக கூட்டணியில் இருந்தாலும்கூட, அதிமுகவின் நன்மைக்காக பலமுறை அறிவுறுத்தல்களை சொல்லி வருகிறார் என்றாலும், இதனால், அதிமுகவுடன் விசிக கூட்டணி வைக்க போகிறதோ? என்ற சந்தேகம் இந்த முறையும் எழுந்தபடியே உள்ளது..
அதற்கேற்றவாறு, அதிமுகவின் கூட்டணி முடிவை வரவேற்று திருமாவளவன் தற்போது பேசியிருந்ததும் பார்க்கப்பட்டு வருகிறது. இதுபோலவே, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு எண்ணம் இருப்பதாக தெரிகிறது..
கம்யூனிஸ்ட்கள்: கடந்த முறையே அதிமுகவுடன் கூட்டணி வைக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் முயன்றதாக ஒரு பேச்சு இருந்தது.. அதனால், இந்த முறை, பாஜக இல்லாத அதிமுகவுடன் இணைய, கம்யூனிஸ்ட்கள் தயங்காது என்கிறார்கள்.. கூடுதல் சீட் பெறுவதுடன், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்றும் கணக்கு போட வாய்ப்புள்ளதாம். போதாக்குறைக்கு, இண்டியா கூட்டணியிலும் உரசல்வந்துவிட்டது..
கூட்டணி விரிசல்: ஆக, திமுக கூட்டணியில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலோ அல்லது கேட்ட இடம் கிடைக்காமல் போனாலோ, கூட்டணியில் விரிசல் வர நிறையவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அந்தவகையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக கட்சிகள் அதிமுக பக்கம் துண்டை போட்டு வருவதாக சொல்கிறார்கள்.. இதில் காங்கிரஸ் 20 சீட் கேட்டதாகவும், அதற்கு அதிமுக ஓகே சொல்லிவிட்டதாகவும்கூட தகவல்கள் வருகின்றன. அரசியலில் எதுவும் மாறலாம் என்பதால், எதையுமே இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications