விருதுநகர் விஜய பிரபாகரன் "சின்ன பையன்".. திமுக மீது எகிறிய பிரேமலதா.. மேட்டர் எங்கெங்கோ வெடிக்குதோ
சென்னை: தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், திமுக மீது வீசியிருக்கும் குற்றச்சாட்டுகள் பல்வேறு அதிர்வலைகளை கிளப்பிவிட்டு வருகிறது.
விருதுநகரில் விஜய பிரபாகரன் தோல்வி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு காரணங்களை அடுக்கியிருக்கிறார்.. நேற்றைய தினம்கூட, செய்தியாளர்களிடம் தேமுதிக தலைவர் பிரேமலதா பேசும்போது, திமுக அரசு மீதும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

விஜய பிரபாகரன்: "விஜயபிரபாகரன் கடைசி வரை களத்தில் ஒரு வெற்றி வேட்பாளராக நின்று, இறுதி வரை சென்று தோல்வியை தழுவியுள்ளார். விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். 0.4 சதவிகிதத்தில் தான் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு, சூழ்ச்சியால் தோல்வியடைய செய்துள்ளனர். அதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது.
3 முதல் 5 மணி வரை எதற்காக உணவு இடைவெளி என வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது? அந்த இடத்தில் இருந்த கலெக்டர், எனக்கு அழுத்தமாக இருக்கிறது, எனது போனை அனைத்து வைப்பதாக சொல்கிறார் என்றால், அவருக்கு அந்த அழுத்தம் கொடுத்தது யார்? விருதுநகரில் மட்டும் நடு இரவு வரை தபால் ஓட்டு எண்ணப்பட்டுள்ளது ஏன்? தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே 40 தொகுதிகளிலும் திமுக வென்றது என எப்படி ஒரு முதல்வர் சொல்லுவார்?
சின்ன பையன்: மதுரையில் உள்ள ஒரு அமைச்சர் விருதுநகருக்கு இரவு 1 மணிக்கு சென்று ஏன் அங்கே வெற்றி சான்றிதழைப் பெற வேண்டும்? ஒரு சிறிய பையன் முதல் முறையாக தேர்தலில் நிற்கும் போது, அங்கு சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்றெல்லாம் கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.
இதனிடையே, விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு மெயில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.. தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் தேதிமுக அறிவித்திருக்கிறது. அதேபோல, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் மறறொரு புகார் மனுவை தந்திருக்கிறார்.
விருதுநகர்: பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, விருதுநகரில் வாக்கு எண்ணிக்கையின்போது நடந்த முறைகேடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் விருதுநகர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் புகார் மனு அனுப்பினோம். ஆனால், தங்களுக்கு மனு வரவில்லை என்று அவர்கள் சொன்னதால், நேரடியாகவே மனு அளித்துள்ளோம்.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடமும் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை" என்றார்.
குற்றச்சாட்டுகள்: ஆனால், தேர்தல் ஆணைய உத்தரவின்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை தெரிவிக்கிறார்.. எனினும் திமுக மீது தேமுதிக வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகள் பலருக்கும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், சில விவாதங்களையும் சோஷியல் மீடியாவில் எழுப்பி வருகிறது.
திமுகவுக்கு எதிரானவர்கள் பிரேமலதாவின் இந்த கருத்தை ஆதரிக்கிறார்கள்.. திமுக பதவியில் இருக்கும்போது தேர்தல் வைத்தால், முடிவுகள் இப்படித்தான் இருக்கும்.. திமுக பதவியில் இல்லாதபோது நடத்தினால் மட்டுமே மற்றவர்களால் இங்கு ஜெயிக்க முடியும்.. விருதுநகர் என்றில்லை, எல்லா இடங்களிலும் இப்படித்தான் முறைகேடாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.. சாத்தான் குளம் தேர்தல் முடிவும் இப்படித்தான் சர்ச்சையானது.. ஆனால், இதுவரை ஒரு தீர்வும் கிடைக்கல" என்று சாடிவருகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை: ஆனால், மற்றொரு தரப்பினரோ, தேமுதிகவை காட்டமாக கேள்வி எழுப்புகிறார்கள்.. "வாக்கு எண்ணிக்கை முடிந்து 2 நாள் ஆகிவிட்டது.. இதுவரை என்ன பண்ணிட்டு இருந்தீங்க? விஜயகாந்த் மீது எல்லாருக்கும் நல்ல மதிப்பு உண்டு.. அதை அப்படியே மகனுக்கும் எதிர்பார்ப்பது சரி இல்லை... இது மக்கள் தந்த முடிவு. இதை ஒரு தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு விமர்சிப்பது நாகரீகம் கிடையாது.
இது தேர்தல் அரசியல்.. லோக்சபா தேர்தலில் நேரடியாகவே களத்தில் இறங்கி போட்டியிட முடிவுசெய்துவிட்டு, "சின்னபையன்" என்று சொல்லி கரிசனமும், கருணையும் எதிர்பார்க்க கூடாது.. யாராக இருந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும்" என்கிறார்கள்.
இதற்கு நடுவில் பாஜகவினரோ, "வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக வென்று விடும் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். இப்போது திமுகவினர் உங்களுக்கு எதிராக வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி சூழ்ச்சியால் வென்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்? அப்படியானால் பாஜக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானதுதானே?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பரபரப்பு: ஆக மொத்தம், விஜயபிரபாகனின் தேர்தல் ரிசல்ட்டைவிட, பிரேமலதாவின் இந்த பரபரப்பு பேட்டிதான் பல்வேறு விவாதங்களை சோஷியல் மீடியாவில் எழுப்பி கொண்டிருக்கிறது. அதேசமயம், தேர்தல் ஆணையத்தில் புகார்கள் வரிசையாக சென்றிருப்பதால், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? என்றும் சந்தேகம் கிளம்பியிருக்கிறது.











Click it and Unblock the Notifications