"இதுவே கடைசி தீபாவளி! நான் செத்து கொண்டிருக்கிறேன்!" கேன்சரால் பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் உருக்கம்
சென்னை: நாம் அனைவரும் இன்னும் சில நாட்களில் கோலாகலமாகத் தீபாவளியைக் கொண்டாடப் போகிறோம். ஆனால், 21 வயதே ஆன இளைஞர் ஒருவர் தனக்கு இதுதான் கடைசி தீபாவளி எனப் பதிவிட்டுள்ளார். மிகக் கொடூரமான கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறதாம். இது தொடர்பான அவரது போஸ்ட் நெட்டிசன்களை கலங்க வைத்துள்ளது.
இந்த உலகிலேயே மிகவும் கொடூரமான நோய்களில் ஒன்று கேன்சர். ஒருவரை கேன்சர் எப்போது தாக்கும் என்றே தெரியாது. அதிலும் மாறி வரும் வாழ்க்கை முறை, அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு, துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கேன்சர் பாதிப்பு அதிகரித்துள்ளது. இளைஞர்கள் குழந்தைகளிடையே கூட கேன்சர் பாதிப்பு ஏற்படுகிறது.

கேன்சர்
அப்படி கொடிய கேன்சர் நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட 21 வயதான இளைஞர் ஒருவர், தனது பாதிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ரெட்டிட் தளத்தில் அவர் தனது கதையைப் பகிர்ந்துள்ளார். 2023இல் அவருக்குப் பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அது ஸ்டேஜ் 4ல் இருந்ததால் அவரது உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் ஒவ்வொரு நாளும் போராடி வருவதாக அவர் பதிவிட்டுள்ளார்.
பல மாதங்களாக கீமோதெரபி உட்பட எல்லா சிகிச்சைகளையும் எடுத்து வருவதாகப் பதிவிட்டுள்ள அவர், இருப்பினும் எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை என கூறியுள்ளார். மருத்துவர்களும் வேறு எந்த சிகிச்சையும் இல்லை என கைவிரித்துவிட்டதாகவும் கூறுகிறார். இதனால் இந்தாண்டிற்குப் பிறகு தான் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த தீபாவளி தனது கடைசி தீபாவளியாக இருக்கும் என்ற பதிவிட்டுள்ளார்.
கடைசி தீபாவளி
கேன்சர் வென்றுவிட்டது என்ற ஆரம்பிக்கும் அவரது போஸ்ட் நெட்டிசன்கள் கலங்க வைத்தது. அவர் மேலும், "இன்னும் சில நாட்களில் தீபாவளி.. சாலைகளில் அலங்கார விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்டன. இதுதான் நான் பார்க்கும் கடைசி தீபாவளி என்பது கடினமாக உள்ளது. இந்த விளக்குகள், சிரிப்பு, மற்றும் சத்தம் அனைத்தையும் நான் இழக்கப் போகிறேன். என் வாழ்க்கை மெதுவாக முடிவுக்கு வரும் அதேநேரம், மற்றவர்களின் வாழ்க்கை சாதாரணமாக இருப்பதைப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு என் நினைவாக வேறு யாரோ தீபம் ஏற்றுவார்கள் என்பதை நான் அறிவேன்.
வேதனையா இருக்கு
பிடித்த ஊருக்கு டிரிப் போவது, சொந்தமாகத் தொழிலை தொடங்குவது, நாய் வளர்ப்பது போன்ற நிறைவேறாத பல ஆசைகள் எனக்கு இன்னும் இருக்கிறது. ஆனால், இந்த ஆசைகள் அனைத்தும் கைநழுவிப் போவது போல் உணர்கிறேன்.. எனக்கு இன்னும் சில காலம் மட்டுமே இருக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது.
எனக்குப் போதியளவில் நேரம் இல்லை என்பதை நான் உணரும்போது, இந்தக் கனவுகள் மங்கிவிடுகின்றன. நான் வீட்டில் இருக்கிறேன், என் பெற்றோரின் முகத்தில் சோகத்தைக் காண்கிறேன். நான் ஏன் இதைப் பதிவிடுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, நான் மறைவதற்கு முன் ஒரு சிறிய அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக இருக்கலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கலங்கிய நெட்டிசன்கள்
அவருடைய இந்த போஸ்ட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் அவருக்கு நம்பிக்கையூட்டும் கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "ஒரு அதிசயம் நடக்கும் என்று நம்புகிறேன், உங்களின் புற்றுநோய் செயல்படாமல் போகும், எல்லாம் சரியாக நடக்கும்! சோர்வடைய வேண்டாம். அதேநேரம் அழகான, நீண்ட மாலை நேர நடைப்பயிற்சிகளுக்குச் செல்லுங்கள். காலையில் பறவைகள் பாடுவதை ரசியுங்கள். மகிழ்ச்சியான இசையைக் கேளுங்கள். நல்ல டின்னர் சாப்பிடுங்கள்.. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications