"தமிழகத்திற்கு பாஜக செய்யும் துரோகம்!” மேகதாது விவகாரத்தில் மத்திய அமைச்சர் சர்ச்சை! எடப்பாடி தாக்கு
சென்னை: மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது மத்திய அமைச்சர் ஒருவர் இப்படிப் பேசுவது சரியான போக்கு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே மேகதாது விவகாரத்தில் நீண்ட காலமாக மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது.

ஆனால், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கும் நீர் தடைப்படும் என்பதால் தமிழக அரசு இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
சோமண்ணா: இந்தச் சூழலில் தான் மோடி 3.0 அமைச்சரவையில் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பதவி கர்நாடகாவைச் சேர்ந்த வி.சோமண்ணாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கு அப்போதே தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு- கர்நாடகா இடையே காவிரி விவகாரத்தில் சிக்கல் நிலவி வரும் நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படுவது சரி இல்லை என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் வி.சோமண்ணா, "நான் கர்நாடகாவுக்கு மட்டும் அமைச்சர் இல்லை. இந்திய நாட்டின் அமைச்சர். எனக்கு அனைத்து மாநிலங்களும் ஒன்று தான்.. எனது அதிகாரத்தில் இருந்து விலகாமல் பணியாற்றுவேன். மேகதாது துட்டத்தைப் பொறுத்தவரை நான்கு மாநிலங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடங்கப்படும். பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே இந்த சிக்கலுக்குத் தீர்வு காணப்படும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை மத்திய அரசு செய்யும்" என்றார்.
எடப்பாடி பழனிசாமி: மேகதாது திட்டத்திற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சோமண்ணாவின் இந்த பேச்சு பேசுபொருள் ஆகி உள்ளது. இதற்கிடையே சோமண்ணா பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மவுனமாக இருக்கக் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய, மாநில அரசுகள் காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சனையில் தொடர்ந்து கபட நாடகமாடி வருவதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்துவந்த நிலையில், போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.
துரோகம்: தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.
ஏற்கனவே காவிரி மேகதாது பிரச்சனையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மீது கடும் தாக்கு: இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதன் காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications