பல கோடி வரி.. ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: பிரபல இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி. துறையின் மேல் முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை படைப்புகளுக்கு ரூ.6 கோடியே 79 லட்சத்தை சேவை வரியாக செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையர் கடந்த 2019 ஆம் அண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டு இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கு
பட தயாரிப்பாளர்களுக்கு இசை படைப்புகளின் காப்புரிமை நிரந்தரமாக வழங்கப்பட்ட பிறகு அவர்கள் தான் அதற்கு உரிமையாளர்கள் என்றும், அதற்கான வரியை தன்னிடம் வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார். தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஜிஎஸ்டி ஆணையர் விளக்கம்
இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை." என்று தெரிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ்குமார் வழக்கு
ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக தெரிவித்த ஆணையர், அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதேபோல், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் ரூ.1 கோடியே 84 லட்சம் சேவை வரி செலுத்த ஜி.எஸ்.டி ஆணையர் தனக்கு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கு தள்ளுபடி
இந்த 2 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜி.எஸ்.டி. ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜி.எஸ்.டி. துறையின் மேல் முறையீட்டு அதிகாரியிடமே நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் உத்தரவிட்டார்.

ஜிவி பிரகாஷ் குமாரின் வழக்கு
அத்துடன் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி அனிதா சுமந்த் தள்ளுபடி செய்ததுடன் நான்கு வாரங்களில் நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications