மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு.. அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. வைகைச் செல்வன் அறிவிப்பு!
சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிவித்துள்ளார். மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்று தெரிவித்துள்ள வைகைச் செல்வன், கட்சியை விட தாம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவர் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமியையும் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் அதிமுகவில் இருந்து விலகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம்பெற்ற 8 அமைச்சர்கள் தற்போது தவெக பக்கம் ஒதுங்கிவிட்டனர். அதில் நேற்று மட்டும் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து வருவோரை கட்சியில் இணைக்க தவெக தலைமையும் தயாராக இருக்கிறது. இதனை வெளிப்படையாகவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். அதிமுக இலக்கிய அணிச் செயலாளராக வைகைச் செல்வன் இருந்து வருகிறார்.
அந்த கடிதத்தில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.
திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்துவிட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.
மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்துவிடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன். "ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று" மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன்.
மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன். 'புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல' இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications