Reels அரசே! பொய் வழக்குகளால் திமுகவை முடக்க முடியாது! அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. கொந்தளித்த உதயநிதி
டெல்லி: முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொய் வழக்குகள் மூலம் திமுகவை முடக்கிவிட முடியாது என அவர் சாடியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூரில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்.. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட முயன்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துவிட்டனர். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இது தொடர்பாகத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி தனது ட்விட்டரில், "முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோபா அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications