போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆர்டர்! பிற்பகலில் தீர்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வெளியிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 1.35 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படாமல் இருந்து வருகின்றன. 96 மாத அகவிலைப்படியை ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு வழங்காமல் இருப்பதை கண்டித்து வரும் வரும் தொழிற்சங்கங்கள் அதனை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன.

அதேபோன்று ஓய்வுபெற்றோருக்கு கடந்த 13 மாதங்களாக பணப் பலங்கள் வழங்கப்படவில்லை என்றும், அதனை முறையாக வழங்க வேண்டும் எனவும், வழங்கப்படாத 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டம் மேற்கொண்டன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை தொடர்ந்து அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சிஐடியு., ஏஐடியுசி., பாட்டாளி, பிஎம்எஸ்., ஐஎன்டியுசி., எச்எம்எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீசை அளித்தன.
இதனை அடுத்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அரசு - தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அகவிலைப்படி உயர்வு வழங்குதல், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு தேதியை அறிவிக்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு 2 முறை முடிவு எட்டாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதனை அடுத்து அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக அதில் உறுப்பினராக உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராததால் தனியார் ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று 2 வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு முன் மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன் ஆஜராகி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதனை நீதிபதிகள் ஏற்று மதியம் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய தாமதம் ஆனதால் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழங்கப்படும் என்றது.












Click it and Unblock the Notifications