தமிழக பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப்பெயர்கள் நீக்கம்... இது நடந்தது எப்போது?
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது அதிமுக ஆட்சியிலேயே நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
"தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்கள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது" என்று தமிழ்நாடு அரசால் அரசானை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.
இதன்படியே தமிழ்நாடு பாடநூல் கழகம் சாதி பெயர்களை பாடப்புத்தகத்தில் இருந்தும் நீக்கும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு தொடங்கியதாக கூறப்படுகிறது.

பாடப்புத்தகம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பெயர்கள் நீண்ட காலமாக அவர்களின் சாதி பெயர்களுடன் தான் இருந்து வருகின்றன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

12ம் வகுப்பு பாடம்
கல்வி அமைச்சராக கடந்த ஆட்சியில் செங்கோட்டையன் இருந்தார். அப்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக வளர்மதி இருந்தார். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் படி, 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் "பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்" என்ற பாடப்பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்றிருந்த பெயர் தற்போது உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டிருக்கிறது.

ராமலிங்கம் பிள்ளை
அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பதை ராமலிங்கம் எனவும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

பாடநூல் கழகம்
மேலும் தமிழின் முதல் நாவலாசிரியரின் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயரை வேதநாயகம் என்று மாற்றி உள்ளது. இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான சி.வை.தாமோதரம் பிள்ளை என்ற பெயரை சி.வை.தாமோதரம் என்று மாற்றி உள்ளது.இதேபோல் தான் பல்வேறு தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயரை நீக்கப்படஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் சாதிபெயர்கள் நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கடந்த ஆட்சியில் செய்யப்பட்டவை என்று தமிழ்நாடு படநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications