காவிரியில் நீர் வரத்து 8 ஆயிரம் கனஅடியாக உயர்வு.. ஒகேனக்கலில் ஆர்பரித்த அருவி! பரிசல் இயக்க தடை
சென்னை: தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பிலிகுண்டுவுக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,500 கன அடியாக இருந்த நிலையில், கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிகையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை. எனினும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையில் இருந்து உபரி நீரை திறந்துவிட்டது.

நீர் வரத்து குறைந்தது
காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை நிறைவேற்றாத கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 3 நாட்களாக தண்ணீர் திறப்பை கர்நாடகா குறைத்தது. இதனால் கர்நாடகாவில் இருந்து பிலிகுண்டுவுக்கு நீர் வரத்தானது குறைந்தது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று இது படிப்படியாக குறைந்து காலை 6 மணி நிலவரப்படி 4,500 கன அடியாக குறைந்தது. இதற்கிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்தானது மீண்டும் குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 7,833 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 4,385 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
தண்ணீர் திறந்த கர்நாடகா
அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 80.31 அடியாக இருந்தது. நேற்று 80.93 அடியாக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதன் காரணமாக நேற்று கர்நாடக அரசு கேஆர்எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டது.
இதையடுத்து தான் இன்று தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுவுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பிலிகுண்டுவுக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,500 கன அடியாக இருந்த நிலையில், கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிகையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 நாட்களாக நீர் வர்த்து சரிந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
