இறுதி நிமிடங்கள்.. சீசிங் ராஜாவை சுற்றி வளைத்து தூக்கிய மஃப்டி போலீஸ்.. ஷாக்கிங் சிசிடிவி காட்சி!
சென்னை: பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலத்தில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் அவரது வீட்டுக்கு அருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் என்பவர் இந்த வழக்கு விசாரணையின் போது போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா ஆந்திராவில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தை அடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் கடப்பாவில் சீசிங் ராஜாவை நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா மீது ஆம்ஸ்ட்ராங் கொலை தவிர மேலும் 5 கொலை வழக்குகள் மற்றும் 33 பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீசிங் ராஜா, ரவுடி ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமாக இருந்துள்ளார். சீசிங் ராஜா வெவ்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். அண்மையில் வழக்கு ஒன்றில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தாம்பரம் பகுதி முழுக்க போலீசார் போஸ்டர் ஒட்டி இருந்தனர்.
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை வேளச்சேரியில் பதியப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக ஆயுதங்களை பறிமுதல் செய்ய நேற்று (செப்டம்பர் 23) அதிகாலையில் நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுத்த சீசிங் ராஜா ஒரு துப்பாக்கியால், போலீசாரை நோக்கி சுட்டதாக தெரிகிறது. அதில் போலீசாரின் வாகனங்கள் மீது குண்டுகள் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புகாக ஆய்வாளர் விமல், சீசிங் ராஜாவை சுட்டுள்ளார். அதில், 2 குண்டுகள் பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
உயிரிழந்த சீசிங் ராஜா உடல், உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீசிங் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. அவரது உடல் சிட்லபாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீசிங் ராஜாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் சீசிங் ராஜா ஒரு உணவகத்திற்கு வந்த நிலையில், அங்கு போலீசார் அவரை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டு அவரை மஃப்டியில் கண்காணித்து வந்தனர்.
சீசிங் ராஜா அங்கு வந்த நிலையில், அவரை தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், தொக்காக அவரைத் தூக்கி உள்ளனர். சுற்றி வளைத்து, சீசிங் ராஜாவை தப்பிக்க விடாமல் மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் தான் நேற்று அதிகாலை விசாரணையின்போது அவர் போலீசாரை தாக்கியதால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications