பிளான் செய்தபடி வெளியாகுமா ‘பராசக்தி’? சென்சார் போர்டு ‘கட்’ போட்டதால் முக்கிய முடிவெடுத்த படக்குழு!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தின் பல காட்சிகளை நீக்க சென்சார் போர்டு வலியுறுத்தியதால் படக்குழுவினர், ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பியுள்ளனர். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்த காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளதால், தணிக்கைக் குழு கட் செய்யுமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக முன்கூட்டியே இப்படம் ரிலீசாக உள்ளதாக தேதியை மாற்றி அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோத உள்ளது 'பராசக்தி'. இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
1960-களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் 'பராசக்தி' படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்த காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பராசக்தி படக்குழுவினர், சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு படத்தை அனுப்பி இருந்தனர் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு பல காட்சிகளில் கட் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சென்சார் போர்டு அதிக கட் வழங்கியதால், அதனை ஏற்காத படக்குழு, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பராசக்தி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி உள்ளதால் படம், திட்டமிட்டபடி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அதனுடன் மோதும் வகையில் திட்டமிட்டபடி பராசக்தி ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications