தீபாவளிக்கு ஜாக்பாட்.. அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மகிழ்ச்சி தரும் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை, 3 சதவீதம் உயர்ந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி முறை நடைமுறைக்கு வரும் எனவும், அறிவித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் கீழ் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும்.

விலைவாசி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வானது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அகவலைப்படி உயர்வு எப்போது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் தற்போது அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடிப்படை சம்பளத்தில் 60% ஆக இருந்த அகவிலைப்படி 63% ஆக உயர்ந்துள்ளது. இதே போல ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் கிடைக்கும் கூடுதல் தொகை அவர்களின் அடிப்படை சம்பளத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி உயர்வு
உதாரணமாக மத்திய அரசு ஊழியர் ஒருவர் அடிப்படை சம்பளமாக 18000 ரூபாய் பெற்றால் 3 சதவீத உயர்வின் மூலம் மாதம் அவருக்கு 540 கூடுதலாக கிடைக்கும். இதன்படி அடிப்படை சம்பளம் அதிகமாக இருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி 60 சதவீதமாக இருந்தபோது 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் 10 ஆயிரத்து 800 ரூபாய் அகவிலைப்படியாக கிடைத்தது.
ஓய்வூதியதாரர்கள்
தற்போது அது 63 சதவீதமாக உயர்வதால் மாத அகவிலைப்படி 11,340 ஆக அதிகரிக்கும். இதன் மூலம் மாதம் தோறும் 540 கூடுதலாக கிடைக்கும். அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்திற்கு ஏற்ப அகவிலை நிவாரண உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலுவை தொகை
இந்த அகவிலைப்படி உயர்வு 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் அறிவிப்பு வெளியான காலத்தில் ஏற்ப ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களுக்கும் நிலுவை தொகையும் வழங்கப்படும். ஜூலை மாதம் முதல் உயர்வு நடைமுறைக்கு வரும் என்பதால் அதற்கான நிலுவைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கூடுதல் தொகை
அடுத்தடுத்து சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பல மாதங்களுக்கான கூடுதல் தொகை ஒரே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது.
7வது ஊதியக் குழு
7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் நடைமுறையின் படி அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வின் தாக்கத்தை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 2026 ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு அகவிலைப்படையை 2 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்திருந்தது.
தீபாவளி பண்டிகை
அப்போது 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது. இப்போது மேலும் 3 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அகவிலைப்படி 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் மாநில அரசுகளும் அகவிலைபடியை உயர்த்துமா? என்ற எதிர்பார்ப்பு மாநில அரசு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
