ஸ்பேஸுக்கு போகும் மனிதன்! ஆனா.. ககன்யான் திட்டத்தின் நோக்கமே வேற! விளக்கிய மத்திய அரசு விஞ்ஞானி
சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இன்று விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ககன்யான் திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது?
"இஸ்ரோவை உருவாக்கியபோதோ விக்ரம் சாராபாய் ஒரு விஷயத்தை மிகத்தெளிவாக கூறியிருந்தார். அதாவது, மற்ற நாடுகளை பார்த்து, அதன் பின்னால் செல்வது நம்முடைய வேலை இல்லை. நமக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். எனவே, இஸ்ரோ முதலில் உருவாக்க வேண்டியது ராக்கெட்டை அல்ல, செயற்கைக்கோளைத்தான். ராக்கெட் யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செயற்கைக்கோள் நம்முடையதாக இருக்க வேண்டும்.

அதன் மூலம் வானிலையை கணிக்கவும், வளங்களை கண்டுபிடிக்கவும், தொலை தொடர்பை உருவாக்கவும் முடியும் என்று சாராபாய் நம்பினார். எனவேதான் இஸ்ரோ ராக்கெட்டை உருவாக்குவதற்கு பதில், செயற்கைக்கோளை உருவாக்கியது. பின்னர்தான் ராக்கெட்களை உருவாக்கியது. அதுவும், படிப்படியாகத்தான் நடந்தது. இன்று சுமார் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை கூட விண்ணில் ஏவுவதற்கான ராக்கெட் நம்மிடம் இருக்கிறது. இப்படியாகத்தான் நாம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.
தற்போதும் கூட நமக்கிருக்கும் உடனடி இலக்கு விண்வெளியில் ஒரு ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்ய வேண்டும் என்பதல்ல. சர்வதேச அளவில் கூட்டு ஆராய்ச்சி நடக்கும்போது அதில் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் உடனடி இலக்கு. ஆனால், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். எனவேதான் சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம். இப்படியாக இந்தியா தனக்கென ஒரு தனி பாதையை வகுத்து அதில் பயணித்துக்கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவுக்கான நேரம் வந்திருக்கிறது. எனவே இதை தாமதம் என்று சொல்ல முடியாது"
ககன்யான் திட்டத்தின் நோக்கம் மனிதர்களை விண்வெளிக்கு பறக்க வைப்பது மட்டும்தானா?
'ககன்' என்றால் விண்வெளி, 'யான்' என்றால் கலன் என்று பொருள். அதாவது விண்வெளிக்கு செல்லும் விண்கலன். இந்த விண்கலத்தை தயாரிப்பதுதான் ககன்யான் திட்டத்தின் பிரதான நோக்கம். உதாரணமாக, விண்வெளியில் ஆக்சிஜன் இருக்காது, எனவே விண்வெளி வீரர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை, கார்பன் தனியாகவும், ஆக்சிஜன் தனியாகவும் பிரித்து கொடுக்கும் கருவியை உருவாக்க வேண்டும்.
அதேபோல விண்வெளி வீரர்கள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வை உள்ளிட்டவற்றை மறு சுழற்சி செய்ய வேண்டும். இதற்கான கருவிகளை கண்டுபிடித்து, அதை விண்கலத்தில் பொருத்தி சரிபார்ப்பதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். இறுதியாகத்தான் மனிதர்கள் இந்த விண்கலத்தில் விண்வெளிக்கு செல்வார்கள்.
ககன்யான் திட்டத்தில் எத்தனை நாட்களுக்கு மனிதர்கள் விண்வெளியில் இருப்பார்கள்?
"ககன்யான் திட்டத்தின்படி 3 பேர் விண்வெளிக்கு செல்வார்கள். தற்போது 4 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் கூடுதலாக இருக்கும் ஒருவர், ஸ்டேன்ட்பை-யாக இருப்பார். முதல் முறை விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மூன்று பேரும், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் விண்வெளியை பலமுறை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்புவார்கள். அடுத்தடுத்த மிஷன்களில் இந்த பயணம் விரிவுபடுத்தப்படும்"
விண்வெளிக்கு செல்லும் வீரர்களில் தமிழர், அல்லது தென் இந்தியர்கள் யாரேனும் இருக்கிறார்களா?
"பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா என நான்கு பேர் விண்வெளிக்கு செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் நால்வரும் இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களாவார்கள். பொதுவாக எல்லா நாடுகளிலும் தொடக்க காலத்தில் விண்வெளிக்கு சென்றவர்கள் அனைவரும் விமானப்படை வீரர்கள்தான். அதன் பின்னர்தான் ஆய்வாளர்கள் விண்வெளிக்கு சென்றனர்" என்று ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications