Keezhadi: கீழடி ஆய்வறிக்கையை தொல்லியல் துறை திருப்பி அனுப்பவில்லை.. மத்திய அரசு பரபர விளக்கம்!
சென்னை: கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை சர்ச்சை தொடர்பாக மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது.
தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வறிக்கையில் சில திருத்தங்கள் செய்யும்படி மட்டுமே கோரினோம். தொல்லியல்துறை இயக்குநர் அறிவுறுத்திய திருத்தங்களை ஆய்வாளர் செய்யவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வு களத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மூலம் அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், 3 ஆம் கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்கள் கிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார். அதன்பின், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4 ஆம் கட்ட அகழாய்வை தொடங்கிய நிலையில், தற்போது கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறையிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இதுதொடர்பாக அண்மையில் சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை இரண்டு கட்டங்களாக தொல்லியல் ஆய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோடு 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கை இப்போது வரை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ள நிலையில், அகழாய்வின்போது கண்டறியப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் தமிழ்நாடு அரசிடமும் ஒப்படைக்கவில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் எழுகிறது. சமீப தினங்களுக்கு முன்னர், 2023 ஜனவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை மீண்டும் மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது இந்திய தொல்லியல் துறையை மோசமாக சித்தரிக்கும் நோக்கம் கொண்டவை.
அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.
கீழடி ஆய்வு அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போது வரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதை. இது இந்திய தொல்லியல் துறையை மோசமான கையில் சித்தரிக்கக் கூடிய நோக்கத்தை கொண்டுள்ளது. ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications