வருகிறார் 'சாணக்கியர்' அமித்ஷா.. எந்த திராவிட கட்சியின் வாக்கு வங்கிக்கு வாய்க்கரிசி போடுவாரோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அமித்ஷா பயணம் மேற்கொண்டால் அதிரிபுதிரி அரசியல் திருப்பங்கள் நிகழும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. தற்போது தமிழகத்துக்கு வரும் அமித்ஷா என்ன செய்ய காத்திருக்கிறாரோ? என்கிற பதைபதைப்பில் இருக்கின்றன அரசியல் கட்சிகள்.

வலதுசாரிகள் என முத்திரை குத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் இந்தியாவை ஆள முடியும் என்பதை நிரூபித்து காட்டிய அரசியல் சாணக்கியர் அமித்ஷா. அவரைப் பொறுத்தவரையில் அரசியல் களம் என்பது வெற்றிக்குரியது; அதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம்; எந்த வியூகத்தையும் கையில் எடுக்கலாம் என்பதுதான்.

இதனைத்தான் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியல் களம் பார்த்து வருகிறது. மாநில சட்டசபை தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்ட கட்சிதான் ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும் என்பது போன்ற மந்தமான மரபுகளை தகர்த்து நொறுக்கியவர் அமித்ஷா. அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் இலக்கு.. அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பது அமித்ஷாவின் ஸ்டைல்.

திரிபுராவில் சாதனை

திரிபுராவில் சாதனை

அதுவும் காலூன்றவே முடியாது; தாமரை மலரவே மலராது என்று சொல்லப்பட்ட மண்ணில் எல்லாம் கண்ணை மூடி திறப்பதற்குள் பாஜகவை அரியாசனத்தில் அமரவைத்தவர் அமித்ஷா. இதற்கு நல்ல உதாரணம் திரிபுரா. இடதுசாரிகளின் கோட்டையாக செங்கொடி பறந்த மண் அது. அங்கே ஒருகாலத்திலும் பாஜகவால் நுழையவே முடியாது என தமிழகத்தைப் போல பேசப்பட்ட மாநிலம். ஆனால் காங்கிரஸ் என்ற பெரிய கட்சியின் அத்தனை தலைவர்களையும் அப்படியே பாஜகவாக மாற்றி சட்டென தேர்தலில் வெற்றி பெற்று காவிக் கொடியை திரிபுராவில் பறக்கவிட்ட மாயாஜலக்காரர் அமித்ஷா.

மே.வங்கத்தில் மிரட்டல்

மே.வங்கத்தில் மிரட்டல்

அதேபாணியில்தான் மேற்குவங்கத்திலும் அமித்ஷாவின் சித்து விளையாட்டு அரங்கேறியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கூட்டணி அமைக்க விடாமல் சதுரங்க ஆட்டம் ஆடியது பாஜக. அதேநேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் இடதுசாரிகளின் வாக்கு வங்கியை அப்படியே பாஜகவின் வாக்கு வங்கியாக உருமாற்றம் செய்து அசத்தினார் அமித்ஷா. செங்கொடி பிடித்த கைகள் காவிக் கொடியை பிடித்தன; இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கியவர்கள் பாரத் மாதா கி ஜே என கோஷம் போட்டனர். இப்போது மேற்கு வங்கத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது பாஜக.

கேரளாவில் பாஜக

கேரளாவில் பாஜக

திரிபுராவிலும் மேற்கு வங்கத்திலும் நடத்திய அதிசயத்தை கேரளாவில் நிகழ்த்த அடிமேல் அடிவைத்து அம்மியை நகர்த்துகிறது பாஜக. திரிபுரா, மேற்கு வங்கம், கேரளாவிலும் ஒரு காலத்தில் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது என கூறப்பட்டது. ஆனால் பாஜகவால் எதையும் செய்ய முடியும் எந்த ரூபத்திலும் சாதிக்க முடியும் என இந்த மாநிலங்களில் சாதித்தவர் அமித்ஷா.

அமித்ஷாவின் தந்திரம்

அமித்ஷாவின் தந்திரம்

முன்பெல்லாம் எம்.எல்.ஏக்களை பேரம் பேசி கட்சி மாற வைத்து ஆட்சியை கவிழ்ப்பதுதான் ராஜதந்திரம். ஆனால் அமித்ஷாவின் ராஜதந்திரம் வேறலெவல்.. ஒரு மாநில ஆட்சியை கவிழ்க்க வேண்டுமா? ஆளும் கட்சியின் 10 அல்லது 20 எம்.எல்.ஏக்களை கொத்தாக ராஜினாமா செய்ய வைத்து கெத்தாக ஜோலியை முடித்துவிட்டு மறுவேலை பார்ப்பதுதான் அமித்ஷா தந்திரம்.

தமிழகத்தில் மாற்றம்?

தமிழகத்தில் மாற்றம்?

இத்தனையையும் பல மாநிலங்களில் அரங்கேற்றிய அமித்ஷா, தமிழகத்தில் மட்டும் இன்னமும் ஆட்டத்தை ஆரம்பிக்காமல் இருக்கிறார். தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகளும் சரிக்கு சமமான வாக்கு வங்கியை வைத்திருக்கின்றன. பேசுவதற்கு வேண்டுமானால் இது பெரியார் மண்; காவி கொடி எல்லாம் பறக்க முடியாது என்பது நன்றாக இருக்கும். ஆனால் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன்களும் எல். முருகன்களும் மட்டுமே கொடுத்து வரும் நெருக்கடியால்தான் திமுகவிலும் இந்துக்கள் இருக்கின்றனர்; திமுகவும் இந்துக்களுக்கான கட்சி என்றெல்லாம் திராவிட சிசுக்கள் பேசுவது எல்லாம் இந்த மண்ணும் ஏதோ மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதாகவே தெரிகிறது. பீகாரில் ஜேடியூ எனும் மாநில கட்சியை உறவாடி அழித்துக் கொண்டிருக்கிறது பாஜக.

அதிரடி வியூகத்துக்கு விதை?

அதிரடி வியூகத்துக்கு விதை?

இதே பாணியில் தமிழகத்தில் எந்த கட்சியை உறவாடி அரவணைத்து அழிக்கப் போகிறது பாஜக? அமித்ஷாவின் ராஜதந்திர பொறியில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது திமுகவா? அதிமுகவா? என்பது விவாதத்துக்குரியதாகிறது. அதிமுகவின் முதுகில் சவாரி செய்து அதிமுகவின் வாக்கு வங்கியை அப்படியே உருமாற்றம் செய்யும் நோக்கில்தான் பாஜக பயணிக்கிறது என்பதையே எம்ஜிஆரின் புகழ்பாடும் தந்திரம் சொல்கிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கு நவம்பர் 21-ல் அமித்ஷா வருகை தருகிறார். இந்த வருகையில் சந்திப்புகள், ஜோதியில் இணைதல் போன்ற சம்பிரதாய சடங்குகள் ஒருபக்கம் இருக்கலாம். ஆனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான ஆழமான, அதிரடியான வியூகத்தையும் விதைத்துவிட்டு போவார்; அதாவது இருபெரும் திராவிடர் கட்சிகளில் ஒன்றுக்கு முடிவுரை எழுதும் அத்தியாயத்துக்கு அடிக்கல் நாட்டிவிட்டுப் போவார் அமித்ஷா என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+