தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..நல்ல செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக இன்று தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தமிழக தென் மாவட்டங்களில் தொடங்கினாலும் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 39 டிகிரி செல்கியல் வெப்பம் பதிவாகிவருகிறது. தெற்கு, மேற்கு மாவட்டங்களில் காலையில் வெயிலும் மாலையில் மழையுமாக கலவையான வானிலை பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூர் தாலுகா அலுவலகம்,மதுரை விமான நிலையம், கோவை மாவட்டம் வால்பாறை, கோவில்பட்டியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

கனமழை
இன்றைய தினம் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை
நாளை முதல் 16ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் சுடும் வெயில்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் இலட்சத்தீவு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications