அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் - தமிழக மக்கள் ஹேப்பி!
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கடந்த வாரங்களில் மழை பெய்தது. ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கோவில்பட்டி மற்றும் உதகமண்டலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேவாலா, கெட்டி, மூரர்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும், சங்கராபுரம், திருமங்கலம், தொழுதூர், தண்டராம்பேட்டை, பந்தலூர், மூங்கில்துறைப்பட்டு, கச்சிராயபாளையம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், வரும் 19-ம் தேதி முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications