நிலவின் தெற்கே.. ஏகப்பட்ட "பிஸ்னஸ்" வாய்ப்பு.. குறி வைத்து இறங்கிய இஸ்ரோ.. இந்தியாவின் மாஸ்டர்பிளான்
சென்னை: நிலவின் தென் துருவத்தில் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்து உள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 மூலம் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் நிலவில் களமிறங்கி உள்ளது. நிலவின் தெற்கை இஸ்ரோ குறி வைக்க பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஏன் நிலவின் தென் துருவம் மீது இஸ்ரோ ஆர்வம் காட்டுகிறது. இதற்கு பின் என்னென்ன காரணங்கள் உள்ளன என்று பார்க்கலாம் வாருங்கள்!

தண்ணீர்: நிலவின் தெற்கு பகுதி என்பது மைனஸ் 240 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் உள்ள பகுதி. 2 பில்லியன் ஆண்டுகளாக.. அதாவது கிட்டத்தட்ட நிலவு தோன்றிய காலத்தில் இருந்தே நிலவின் இந்த பகுதியில் பெரிதாக சூரிய வெளிச்சம் படவில்லை. இதன் கோணம் காரணமாக 10 சதவிகிதம் அளவில் மட்டுமே சூரிய வெளிச்சம் இங்கே உள்ளது.
அதனால் இங்கே தண்ணீர் உறைந்து உள்ளே காணப்படுகிறது. அதாவது உள்ளே ஐஸ் பாறைகளாக தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கண்டுபிடிக்கவே நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவின் விக்ரம், பிரக்யான் சந்திரயான் 3 மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.
கனிமங்கள், கெமிக்கல்கள்: இங்கே இருக்கும் அம்மோனியா, மக்னீசியம் போன்ற கனிமங்கள், தனிமங்கள், கெமிக்கல்கள் முக்கிய காரணம் ஆகும். இவை விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவும். விண்வெளியில் வேதி பொருட்கள் எப்படி இயங்குகின்றன. அதை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை கண்டறிய முடியும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இவை உதவியாக இருக்கும்.
எரிமலை, நிலவின் தோற்றம்: அதோடு இந்த நிலவின் தென் பகுதி உருவான காலத்தில் இருந்து அப்படியே மாறாமல் உள்ளது. இந்த பகுதி உறைந்து காணப்படுவதால் காலப்போக்கில் இங்கே எதுவுமே மாறவில்லை. இதை ஆய்வு செய்வதன் மூலம் நிலவின் தோற்றத்தை ஆய்வு செய்ய முடியும். நிலவின் தென் பகுதியில் உள்ள குழிகளில் 2 பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படவில்லை. லேசான மேற்பரப்பில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது. காரணம் நிலவு அச்சு 88.5 டிகிரி செங்குத்தாக உள்ளது. இதனால் சூரியன் நிலவின் தென் பகுதிக்கு ஒளியை அனுப்ப முடிவது இல்லை. இதனால் நிலவின் தென் பகுதி இன்னமும் ரகசியமாகவே உள்ளது.
இங்கே வெப்பநிலை மைனஸ் 230 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இவை எல்லாம் கருப்பான, ஐஸ் படிந்த, ரகசியமான, மர்மம் நிறைந்த மிகப்பெரிய பள்ளங்கள் ஆகும். நிலவின் தென் துருவம் எப்போதும் சுவாரசியமும், பல புதிர்களும் நிறைந்த ஒன்றாகும். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட சிறிய மாற்றமும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
முதலில் நிலவின் முழு தென் பகுதி முழுக்க சூரிய வெளிச்சம் படாமல் இருந்தது. ஆனால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட வைத்தது. நிலவு லேசாக சாய்ந்தது. இதனால் நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. இந்த இடத்தைதான் தற்போது சந்திரயான் 3 ஆராய போகிறது. இங்கே சூரிய ஒளியே படாத குழிகளும் உள்ளன.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம்தான் நிலவில் தற்போது நடக்கும் ஆராய்ச்சிக்கு எல்லாம் காரணம். அப்போது ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் நிலவின் அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகியது. இது அங்கு தண்ணீரை உருவாக்கியது. இந்த பகுதிகளை ஆய்வு செய்தால் மனித குல தோற்றம், விண்வெளி ரகசியங்கள் பல தெரிய வரும்.
நீர் - உரிமை கொண்டாட முடியாது - ஆனால்: அதேபோல் பிஸ்னஸ் ரீதியாகவும் இது இந்தியாவிற்கு உதவும். அதன்படி நிலவின் எந்த பகுதிக்கும் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால் அங்கே உள்ள பொருட்களை வணிக ரீதியாக பயன்படுத்த முடியும். இங்கே உள்ள தண்ணீரை எடுக்கும் பட்சத்தில் இஸ்ரோ அதை விண்வெளி பயணங்களில் பயன்படுத்த முடியும்.

அதாவது அங்கே தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கும் சோர்ஸாக இந்தியா மாறும். நிலவில் உலக நாடுகள் எதிர்காலத்தில் பேஸ் அமைக்க உள்ளது. அதாவது விண்வெளி பயணங்களை மேற்கொள்ள நிலவில் இருந்து பயணம் செய்ய வசதியாக அங்கே பேஸ் அமைக்கப்படலாம். இதற்கான ரேஸில் இஸ்ரோவும் இறங்கி உள்ளது. அங்கே பேஸ் அமைக்கும் குழுவில் இஸ்ரோவும் இணையலாம். இங்கே தண்ணீரை கண்டுபிடிக்கும் பட்சத்தில் இந்தியா அந்த வளத்தை முதல் ஆளாக பயன்படுத்த தொடங்கலாம்.
எண்ணெய் வளம் போல நிலவில் தண்ணீர் வளத்தை இந்தியா பயன்படுத்தலாம். இது போக சந்திரயான் மூலம்தான் நிலவில் களமிறங்க முடியும் என்பதை இஸ்ரோ நிருபிக்க முடியும். இதன் மூலம் மற்ற நாடுகளின் திட்டங்களை நிறைவேற்ற இந்தியா களமிறங்கும். அதாவது நிலவிற்கு வேறு நாடுகளின் திட்டங்களை அனுப்ப இஸ்ரோ பயன்படுத்தப்படும். இஸ்ரோ ஜப்பானின் ஆராய்ச்சி அமைப்புகளை நிலவிற்கு அனுப்ப உள்ளது. பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு இது பெரிய அளவில் உதவும்.












Click it and Unblock the Notifications