அண்ணாமலையை மாத்தணும்.. அதிமுக வச்ச கோரிக்கை? கேட்காத டெல்லி? கூட்டணி உடைய இதுதான் காரணம்?
சென்னை: அதிமுக தலைவர்களை இகழ்ந்து வரும் அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றால் கூட்டணியில் நீடிக்க முடியாது என்று பாஜக தலைவர்களிடம் அதிமுக தலைவர்கள் கூறியதாக தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அதிமுக தலைவர்கள் பலர் சிவி சண்முகம் தலைமையில் பாஜகவின் பியூஸ் கோயலை சந்தித்தனர். அதிமுக - பாஜக மோதல் தொடர்பாக ஆலோசனை செய்ய இந்த சந்திப்பு நடந்தது.

அதன்பின் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உடனும் இவர்கள் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பில் பேசிய அதிமுக தலைவர்கள், பாஜகவுடன் இவ்வளவு காலம் நட்பாக இருந்துவிட்டோம். இன்னும் சொல்லப்போனால் பாஜகதான் நாங்கள்; 5 வருடம் ஆட்சியை முடிக்க முக்கிய காரணமாக கூட இருந்தது. பாஜக கூட்டணியில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதிமுக கட்சியை அவர்கள் அவமதிப்பதை ஏற்க முடியாது . அண்ணாமலையை மாற்றும் படி நாங்கள் கூற முடியாது,
ஆனால் அண்ணாமலை இருக்கிறவரை கூட்டணியில் சிக்கல்தான். அவர் இருந்தால் கூட்டணி இருக்காது. அவரை வைத்துக்கொண்டு கூட்டணியை தொடர முடியாது. அவர் கூட்டணியை மதிப்பது இல்லை. அவரால் பாஜக அதிமுக கூட்டணிக்கு நல்லதா என்று நீங்களே பாருங்கள். அவரால் அதிமுகவை விடுங்கள் பாஜகவிற்கு நல்லதா என்பதை முதலில் பாருங்கள்.
பாஜகவிற்கு அவர் என்ன செய்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், என்று பொறிந்து தள்ளி இருக்கிறார்களாம். இந்த சந்திப்பிற்கு பின் வெள்ளி, சனிக்கிழமை இரண்டு நாட்களுமே அமித் ஷாவை சந்திக்க அதிமுக தலைவர்கள் நேரம் கேட்டனர். ஆனால் அதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
அதோடு அங்கே அதிமுக தலைவர்களிடம்.. நாங்கள் எங்கள் மாநில தலைவர் பற்றி முடிவு எடுப்போம். நீங்கள் அதை சொல்ல கூடாது. யார் தலைவராக இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதை நாங்களே முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்களாம் பாஜக தலைவர்கள். இதனால் உடைந்த முகத்தோடேயே அதிமுக தலைவர்கள் திரும்பி வந்துள்ளனர்.
உச்சம்: இதையடுத்தே அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாம். தங்கள் முடிவை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே கூட்டணியை அதிமுக பாஜக முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி முறிவு தொடர்பான அறிக்கையிலும் கூட அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது., என்றும் அறிவித்துள்ளனர் .












Click it and Unblock the Notifications