செங்கல்பட்டில் நிலத்தை பாகப்பிரிவினை செய்ய ரூ.20,000 லஞ்சம்.. செய்யூர் விஏஓக்கு சரியான பாடம் கற்பித்த இளைஞர்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நிலத்தை அளந்து பாகப்பிரிவினை செய்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டதற்கு 5,000 தான் என்னால் முடியும் என்று கொடுத்திருக்கிறார். ஆனால் விஏஓ மீதி 15 ஆயிரத்தை தந்தால் தான் நிலத்தை அளந்து பாகப்பிரிவினை செய்வேன் என்று கூறியிருக்கிறார். இதனால் லஞ்சம் கொடுக்க விருப்பமின்றி லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின் பேரில் விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த வெடால் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தமிழரசன் (வயது 23). தமிழரசனுக்கு சொந்தமான தன் நிலத்தை பாகப்பிரிவினை செய்ய முற்பட்டார். இதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் இது சம்பந்தமாக மனு ஒன்றை அளித்தார்.

ரூ.20,000 லஞ்சம் கேட்ட விஏஓ
அப்போது அந்த மனுவை படித்து பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ராமன் (52) என்பவர் முறையாக நிலத்தை பாகப்பிரிவினை செய்து தர வேண்டும் என்றால் ரூ.20,000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது தமிழரசன் இவ்வளவு பணம் தற்போது என்னிடம் இல்லை என்று கூறியிருக்கிறார். அப்போது இப்போது எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை முதலில் கொடுங்கள் என்று சொல்லியதாகவும், அதற்கு தன்னிடம் ரூ.5,000 இருப்பதாக அந்த பணத்தை கொடுத்துள்ளார் தமிழரசன்.
அந்த பணத்தை வாங்கிக் கொண்ட விஏஓ ராமன் சரி பாத்து பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு பிறகு மீண்டும் தமிழரசன் கிராம நிர்வாக அலுவலகம் சென்று பாகப்பிரிவினை செய்வதற்கு எப்போது வருவீர்கள் என்று கேட்டு இருக்கிறார். அப்போது மீதி பணம் ரூ.15 ஆயிரத்தை கேட்டுள்ளார். இந்த பணத்தை கொடுத்தால் நிலத்தை அளந்து தருவதாக அவரிடம் கூறிவிட்டார்.
விஏஓ அதிரடி கைது
இதனால் அதிர்ச்சிக்குள்ளான தமிழரசனுக்கு லஞ்சம் கொடுக்கவும் விருப்பமில்லை. இதனால் விஏஓ லஞ்சம் கேட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த யோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை தமிழரசன் விஏஓ ராமனிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிய ராமனை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்சம் வாங்கிய ராமனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டப்படி லஞ்சம் வாங்குவதும் தவறு.. கொடுப்பதும் தவறு.. இருந்தபோதிலும் அரசு அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications