வீட்டில் கோபித்துக்கொண்டு சென்னை வந்த மாணவனிடம் ரூ.63,500 பணம் பறித்த போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
சென்னை: பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்னை வந்த பள்ளி மாணவனிடம் ரூ.63,500 பணம் பறித்த போலீஸ்காரர்கள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை மேற்கு காவல் இணை ஆணையாளர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோனி செல்வம். இவரது மகன் கிங்ஸ்டன் கிஷோர் (17). இவர் ஒரு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்த கிஷோர் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்த 63,500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து மூலம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார்.
அதிகாலை 2 மணியளவில் அங்கு ரோந்து பணியிலிருந்த சி.எம்.பி.டி காவல் நிலைய குற்றபிரிவு முதல்நிலை காவலர்களான வேல்முருகன் மற்றும் அருண்கார்த்திக் ஆகியோர் மாணவன் கிங்ஸ்டன் கிஷோரை வழிமறித்து அவரது கையில் இருந்த 63,500 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

பெற்றோரிடம் சொன்னான்
இதனால் கையில் பணம் இல்லாமல் எங்கு செல்வது என தெரியாமல் தவித்த மாணவன் கிஷோர், இறுதியாக தனது தந்தை அந்தோனி செல்வத்திடம் கூறி உள்ளார். வீட்டை விட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த போது தன்னிடம் இருந்த பணத்தை போலீஸ்கார்கள் இரண்டு பேர் பறித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தந்தை புகார்
இதனையடுத்து சிறுவனின் தந்தை சி.எம்.பி.டி போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து சட்டம் ஒழுங்கு ஆய்வாளரிடம் புகார் கொடுத்தார். சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், மதுரவாயல் உதவி ஆணையாளர் ரமேஷ் பாபுவை சந்தித்து சம்பவம் பற்றி கூறி சிறுவனின் தந்தையை அழைத்துக்கொண்டு சென்றார்.

விசாரணை
உதவி ஆணையர் ரமேஷ் பாபு, காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் ஆகியோரை அழைத்து விசாரித்தார். அப்போது சிறுவனிடம் பணம் பறித்த சம்பவம் உண்மை என தெரிய வந்தது. புகாரை தொடர்ந்து காவலர் வேல்முருகன் சிறுவனின் தந்தைக்கு கைபேசியில் அழைப்பு செய்து இந்த சம்பவத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கூறியதுடன், பணம் தருவதாக கூறினாராம். சிறுவனின் தந்தை பணம் வேண்டாம் தன் மகனிடம் பிடுங்கிய பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியதுடன் புகாரை வாபஸ் வாங்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்

ஆணையர் உத்தரவு
இதனிடையே உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் காவல் நிலையத்துக்கு வருபவர்களிடம் மிரட்டி அதிக அளவு பணம் வாங்குவது, கடைகளை மிரட்டி பணம் வாங்கியது போன்ற சம்பவங்களில் காவலர்கள் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து இந்த நிலையில் சென்னை மேற்கு காவல் இணை ஆணையாளர் ராஜேஸ்வரி பள்ளி மாணவனிடம் ரூபாய் 63 ஆயிரத்து 500 பணத்தை பறித்துக் கொண்ட சிஎம்பிடி காவல்நிலைய குற்ற பிரிவு காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் கார்த்திக் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டிய காவலர்கள் இரண்டு பேர் பள்ளி மாணவனிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications