ஏடிஎம்க்கு பணம் நிரப்பும் நிறுவன காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சேத்துப்பட்டு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளி எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார்.
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியினை தனியார் நிறுவனங்கள் தான் செய்து வருகின்றன.

துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன், பாதுகாப்பான வாகனத்தில் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து சென்று ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கின்றன. இதேபோல் தானியங்கி ஏடிஎம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் வைக்கப்பட்ட பணத்தை வங்கிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்து வருகின்றன.
இந்த பாதுகாப்பு வாகனங்கள் பல்வேறு வசதிகள் கொண்டவை ஆகும்.யாரும் எளிதாக கொள்ளை அடித்துவிட முடியாது. தப்ப முடியாது. பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருப்பதால் எளிதில் யாரும் கொள்ளை அடிக்கும் நோக்கில் நெருங்க முடியாது.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளியாக ராணா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை ராணா சிங் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது. அந்த குண்டு மின்னல் வேகத்தில் காவலாளி ராணா சிங்கின் வயிற்றில் பாய்ந்தது. அதில், பலத்த காயமடைந்த ராணாசிங், உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications