சென்னையில் துரத்திய தெரு நாய்கள்.. கீழே விழுந்த பெண்.. பரிதாபமாக உயிரிழந்த சோகம்
சென்னை குரோம்பேட்டையில், தெரு நாய்கள் துரத்தியதால் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை: சென்னை குரோம்பேட்டையில், தெரு நாய்கள் துரத்தியதால் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தெருநாய்கள் பிரச்சனை அதிகமாக உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகளை நாம் பார்த்து பதறி இருப்போம். ஹைதராபாத்திலும், கேரளாவிலும் நடந்த சம்பவங்களின் வீடியோக்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும்.
தெருநாய்கள் வெறிபிடித்து திரிந்தால், அவற்றால் பேராபத்து ஏற்படும், வீட்டில் விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள், சாலையில் செல்லும் பெரியவர்கள் பலர் தெருநாய்களால் கடிக்கப்படும் செய்திகள் அதிகமாக உள்ளது. சென்னையிலும் தெரு நாய்கள் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகமாக உள்ளது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில், நாய் துரத்தியதால் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரோம்பேட்டை , அஸ்தினாபுரம், தாம்பரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை, ராதா நகரை சேர்ந்த தேன்மொழி (வயது 55). இவர் குரோம்பேட்டையில் ஒரு நூலகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தேன்மொழியும் அவரின் மகனும் வெளியில் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் காந்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சில தெரு நாய்கள் வாகனத்தை சூழ்ந்து துரத்தின. நாய்களிடமிருந்து தப்பிக்க பைக்கை தேன்மொழியின் மகன் வேகமாக இயக்கி இருக்கிறார்.
இதில், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தேன்மொழி கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறார். தலையில் பலத்த காயத்துடன் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேன்மொழி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அண்மையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications