சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள்.. ஆன்லைன் ஏலத்தில் அதிரடி முடிவு.. அடுத்து 3,607
சென்னை: சென்னை மாநகர சாலைகளிலும், பல்வேறு பகுதிகளிலும் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு இப்போது ஒரு முடிவு காணும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.. போலீசாரால் கைப்பற்றப்பட்ட 5,543 வாகனங்களில், முதற்கட்டமாக 1936 வாகனங்கள் ஆன்லைனில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.. மற்ற வாகனங்களும் அடுத்தடுத்த கட்டங்களில் ஏலத்திற்கு கொண்டு வரப்பட உள்ளன.
சென்னை நகரில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட காலமாக உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் பல வாகனங்கள் கிடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படி கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சாலையோர இடங்களும் ஆக்கிரமிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதையடுத்து, போலீசார் அவ்வப்போது இதுபோன்ற வாகனங்களை அடையாளம் கண்டு கைப்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மொத்தம் 5,543 வாகனங்கள் ஏலம் விடப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, முதல்கட்டமாக 1936 வாகனங்கள் இன்று மின்னணு முறையில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஏல நடவடிக்கையானது பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையான முறையில் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. இந்த முதல்கட்ட ஏலத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மிச்சமுள்ள 3607 வாகனங்களும் தொடர்ந்து முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களாக விரைவில் ஆன்லைன் வாயிலாக ஏலத்தில் விடப்படவுள்ளன.
அதுமட்டுமல்லாமல், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பிற சட்டவிரோத வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் காப்பில் உள்ள 81 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 ஆட்டோக்கள் உள்ளிட்ட மொத்தம் 102 வாகனங்களும் கோர்ட்டின் முறையான அனுமதியை பெற்று விரைவில் அவைகளையும் ஆன்லைனி வாயிலாகவே ஏலம் விடப்பட உள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
பல வருடங்களாகவே சாலையோரங்களில் கிடந்து நகரின் அழகை கெடுப்பதுடன், போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்படி ஒரே கட்டமாக அகற்றப்பட்டு வருவது சென்னை மாநகர மக்களுக்குப் பெருத்த நிம்மதியை அளித்துள்ளது.
முதற்கட்டமாக 1936 வாகனங்களின் ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 3,607 வாகனங்கள் எப்போது ஏலத்திற்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. அத்துடன் இந்த நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சியின் இடப்பற்றாக்குறை முற்றிலுமாகத் தீர்க்கப்படுவதுடன், அரசுக்கும் உரிய வருவாய் ஈட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
