சென்னை எர்போர்ட்டில் எமர்ஜென்சி.. இஞ்சின் கோளாறுடன் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்! பரபரப்பு
சென்னை: சவுதி அரேபியாவின் ஜெட்டா நோக்கி சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 186 பயணிகள் இருந்த நிலையில், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சென்னை ஏர்போர்ட்டில் திடீரென இந்த விமானம் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக எப்போதுமே விமானங்களில் அதிகபட்ச பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படும். இத்தனை விதிகள் பின்பற்றப்பட்டு இருந்தாலும் கூட சில நேரங்களில் மீண்டும் அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

விமானத்தில் கோளாறு
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH156 விமானம் கோலாலம்பூர் ஜெட்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் விமானம் வழக்கம் போல மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கிளம்பியது. அப்போது நடுவானில் விமானத்தின் 2வது எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானி அருகே இருந்த சென்னை விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார்.
ஏர்போர்ட்டில் எமர்ஜென்சி நிலை
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் முழுமையான எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டாலும், விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 186 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களது உடைமைகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விமான நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் குழுக்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விளக்கம்
இருப்பினும், இதனால் சென்னை விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் விமான நிலையத்தில் இயல்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் டெல்லியிலும் உள்ள அதிகாரிகள், விமானம் அவசரமாக தரையிறங்கியதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடரும் சம்பவங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதேபோல விமானம் ஒன்றில் எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்திருந்தது. இப்போது சில நாட்களில் மீண்டும் அதேபோல சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, கோவாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றும் எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கோவா விமான நிலையத்துக்குத் திரும்பி அவசரமாக தரையிறக்கப்பட்டது.
6E 2102 என்ற அந்த விமானம் காலை 9.16 மணிக்கு புறப்பட்ட நிலையில், எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் கோவா திரும்பியது. அப்போதும் முழுமையான எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டே விமானம் தரையிறங்கியிருந்தது. அந்த விமானம் காலை 9.51 மணிக்கு கோவா ஏர்போட்டில் உள்ள ரன்வே 28ல் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் ஸ்டாண்ட் 6க்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 10.03 மணியளவில் எமர்ஜென்சி நிலை திரும்ப பெறப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறி, போர்டிங் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
