6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட்
சென்னை: பயணிகள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிசியான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னையை பெங்களூர் விமான நிலையம் முந்தியுள்ளது. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் முக்கிய நுழைவாயிலாக விளங்கிய சென்னை விமான நிலையம், தற்போது கொல்கத்தா விமான நிலையத்திற்கும் பின்னால் சென்று, பிசியான விமான நிலையங்களின் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் 17.3 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதே காலகட்டத்தில் கொல்கத்தா விமான நிலையத்தை 17.6 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். முன்பெல்லாம் சென்னைக்கு பின்னால் இருந்த பெங்களூர் விமான நிலையம், தற்போது நாட்டின் மூன்றாவது மிகப் பரபரப்பான விமான நிலையமாக உயர்ந்துள்ளது.

6 வது இடத்தில் சென்னை விமான நிலையம்
உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கையில் மட்டும் பார்க்கும்போது, ஏப்ரல் மாதத்தில் 31.7 லட்சம் பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தையும் பெங்களூர் முந்தியுள்ளது. நாட்டின் பிசியான விமான நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லியும் இரண்டாவது இடத்தில் மும்பையும் 3-வது இடத்தில் பெங்களூரும், 4 வது இடத்தில் ஹைதராபாத்தும் உள்ளன. 6-வது இடத்தில் உள்ள சென்னையில், கடந்த பத்து ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கை 24 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
2016ஆம் ஆண்டில் 14,02,247 ஆக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 2026ஆம் ஆண்டில் 17,39,902 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அதே காலத்தில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் முறையே 105 சதவீதம் மற்றும் 100 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் அதிருப்தி
"விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை ரத்து செய்துள்ளன. மேலும், விமான நிலையத்தின் ஏர்சைடு பணிகளும் நிறைவடைந்த பிறகு சென்னை விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்து அதிகரிக்கும்" என்று அதிகாரி ஒருவர் கூறினார். விமான நிலையத்தின் பராமரிப்பு, டெர்மினல் 3 கட்டிடப் பணிகள் நீடித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பயணிகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவர் கூறுகையில், "பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் விமானப் பயணம் மற்றும் இடமாற்றம் மிகவும் வசதியாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கழிப்பறைகள், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் பராமரிப்பில் பல குறைகள் உள்ளன. மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களில் உணவு மற்றும் வணிக வசதிகளும் தனியார் நிர்வாகத்தில் உள்ள விமான நிலையங்களை விட குறைவாக உள்ளன.
பரந்தூர் விமான நிலையத் திட்டம்
பல பயணிகள் தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் மீதே நம்பிக்கை வைத்துள்ளனர். "ஸ்ரீபெரும்புதூர் விமான நிலையத் திட்டம் நடைமுறைக்கு வராததால் சென்னை ஏற்கனவே ஒரு வாய்ப்பை இழந்துவிட்டது. குறைந்தபட்சம் பரந்தூர் திட்டமாவது விரைவில் நிறைவேறி, நகர மக்களுக்கு சிறந்த நிர்வாகம் மற்றும் இணைப்புகளைக் கொண்ட விமான நிலையம் கிடைக்க வேண்டும்" என்றார்.
தொழில் துறையினரும் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என வலியுறுத்துவதை பார்க்க முடிகிறது. தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (SICCI) மூத்த துணைத் தலைவர் வி.என். சிவசங்கர் கூறுகையில், "சென்னையின் தற்போதைய விமான நிலையம், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற தனியார் விமான நிலையங்களைவிட பல வகையில் பின்தங்கியுள்ளது. உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை; பராமரிப்பும் திருப்திகரமாக இல்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்
பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் அதிக உள்நாட்டு மற்றும் சர்வதேச இணைப்புகளை உருவாக்கி, பல விமான நிறுவனங்களை ஈர்த்துள்ளன. அதனால் அங்கு பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, தற்போதைய விமான நிலையத்தை மாற்றியமைப்பதால் பெரிய பலன் இல்லை என்றும், பரந்தூரில் திட்டமிடப்பட்டுள்ள மிகப்பெரிய இரண்டாவது விமான நிலையமே சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்.
சென்னைக்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பே இரண்டாவது விமான நிலையம் அமைந்திருக்க வேண்டும். மேலும் காலத்தை வீணாக்க முடியாது. விமான நிலையத்தை விமான சேவைக்கான மையமாக மட்டும் பார்க்கக் கூடாது. உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்கள் நகரங்களின் மற்றும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கின்றன. முதலீடுகளை ஈர்க்கவும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வலுவான பொருளாதார சூழலை உருவாக்கவும் அவை உதவுகின்றன" என்றார்.












Click it and Unblock the Notifications