'ரத்த ரத்தமா வருது.. மூச்சு கூட விடமுடியால'.. சாகும் முன் ஜிம் டிரெய்னர் பேச்சு - கலங்க வைத்த ஆடியோ
சென்னை : சென்னை ஆவடி அருகே அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ், என்னால் முடியவில்லை.. ரத்தம் ரத்தமாக வருகிறது, மூச்சுக்கூட விட முடியல.. என இறப்பதற்கு முன்பு பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இவர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஸ்டீராய்டு ஊசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் வயது 25. இவர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஸ்டீராய்டு ஊசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சபரிமுத்து என்கின்ற ஆகாஷ் (வயது 25). இவர் நடுக்குத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார். 25 வயதான ஆகாஷ் பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

உடற்பயிற்சி
தொடர்ந்து மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் தொடர்ந்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 22ம் தேதி ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆகாஷ் உயிரிழப்பு
ஆகாஷ் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆகாஷ்க்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாகவும் , நுரையீரலும் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சபரிமுத்து என்கிற ஆகாஷ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

உள்ளுறுப்புகள் செயல் இழப்பு
முன்னதாக மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஆகாஷ் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்ததுடன், கட்டுமஸ்தான உடலுக்காக ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு கிட்னி, நுரையீரல், இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் செயல் இழந்து ஆகாஷ் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பக்க விளைவுகள்
இந்நிலையில் அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ், அதனால் தனக்கு ஏற்பட்ட விளைவுகளை உருக்கமாக பேசி உள்ளார். ஆகாஷ் வெளியிட்டிருந்த ஆடியோவில் கூறியிருந்ததாவது: எனக்கு காலையில் பயிற்சிக்கு போகும் இருமல் வந்தது. அந்த இருமலால் ஏற்பட்ட சளியை வெளியில் துப்பும் போது, அதில் ரத்தம் கலந்து இருந்தது. ரத்தம்தான் சளியில் கலந்து வருகிறது என்பதை உணர்ந்தேன்.

முடியவில்லை
இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. என்னால் மூச்சு விட முடியவில்லை. மூச்சுதிணறல் ஏற்பட்டது. எனவே பயிற்சியை 30ம் தேதி வரை நிறுத்திவிட்டு 1ம் தேதி முதல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் முடியவில்லை. மாத்திரை எடுத்துக்கொண்டாலும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. என்னால் முடியவில்லை. ஒர்க் அவுட்டும் அவ்வளவு பண்ண முடியல. கீழ குனிந்து போடும் ஒர்க்அவுட் எல்லாம் மூச்சுத்திணறது.

பேராபத்து
மார்புக்காக போடும் ஒர்க்அவுட்டும் செய்யமுடியவில்லை. இப்பவே என்னால் பேசமுடியவில்லை.. அட்ஜஸ்ட் பண்ணித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்" இவ்வாறு உயிரிழப்பதற்கு முன்பு ஆகாஷ் பேசிய ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி உள்ளது.ஜிம்மில் பயிற்சி பெறுபவர்கள் ஸ்டீராய்டு ஊசி போட்டுக்கொள்வது பேராபத்தை விளைவிக்கும் என்றே பலரும் சொல்கிறார்கள். எனவே மக்களே உடலை கட்டுமஸ்தாக வைப்பதற்கு இதுபோன்ற உயிருக்கு உலைவைக்கும் வழிகளை மறந்தும் தேர்வு செய்துவிடாதீர்கள் .












Click it and Unblock the Notifications