chennai bank fraud: வெளிநாட்டில் இருந்த வாடிக்கையாளர்.. கோடி கோடியாக சுருட்டிய வங்கி அதிகாரிகள்! சென்னையில் நடந்த பகீர்
சென்னை: வங்கிகளில் பணம் வைத்தால்தான் (chennai bank fraud) பாதுகாப்பாக இருக்கும் என நினைக்கும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வங்கி கணக்கில் போட்டு வைத்திருந்த ரூ. 1.40 கோடியை வங்கி அதிகாரிகள், ஊழியர்களே மோசடி செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வங்கிகளில் பணம் வைத்தால்தான் பாதுகாப்பாக இருக்கும் என பொதுமக்கள் நினைப்பதுண்டு. வீட்டில் இருந்தால் திருட்டு பயம் காரணமாக வங்கிகளில் டெபாசிட் செய்து வைப்போம் என பலரும் தங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கிகளில் போட்டு வைக்கிறார்கள். ஆனால், வங்கிகளிலும் தற்போது நடக்கும் மோசடிகள் மக்களை அதிர வைப்பதாக உள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்
தலைநகர் சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கி அதிகாரிகள், வெளிநாட்டில் இருக்கும் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அக்கவுண்டில் இருந்து 8 கோடிக்கு மேல் சுருட்டியுள்ளனர். திடுக்கிட வைத்த இந்த மோசடி சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன் பாண்டியன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அருணை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியதாவது: எனது உறவினர் தீனதயாளன் அவரது மனைவி சித்ராவுடன் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் சென்னை அண்ணா நகரில் 'இண்டஸ்இண்ட்' வங்கி கிளையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான 3 வங்கி கணக்குகள் உள்ளன.
1.43 கோடி மோசடி
இந்த வங்கி கணக்குகளில் இருந்து 6.6.2015 முதல் 6.9.2020 வரையிலான காலக்கட்டத்தில் அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்களது செக் மற்றும் வவுச்சர்களில் வங்கி அலுவலர்கள் போலியாக கையொப்பமிட்டு வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.1. 43 கோடி பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
போலியாக கையழுத்திட்டு
இதில் அமெரிக்காவில் வசித்து வரும் தீனதயாளன், சித்ரா தம்பதியின் வங்கி செக் போலியாக கையொப்பமிட்டு, வங்கி அலுவலர்களால் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. வாடிக்கையாளர்களின் முன் அனுமதி பெறாமல் அவர்கள் நிரந்தர வைப்பு தொகையை நிறுத்தி வைத்து, வங்கி ஊழியர்களே போலியாக கையழுத்திட்டு இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இந்த மோசடியை அரங்கேற்றியது இந்த வங்கியின் துணை மேலாளர் வேணுகோபால் (வயது 50) மற்றும் காசாளராக பணியாற்றி வரும் குலோத்துங்கன் (49) தனசேகரன் (41) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது.
போலீசார் விழிப்புணர்வு
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் இதே பாணியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.8 கோடிக்கு மேல் பணத்தை மோசடி செய்தது கண்டறியப்பட்டது. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் பணத்துக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய வங்கி அதிகாரி, ஊழியர்களே பண மோசடியில் ஈடுபட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தங்கள் வங்கி பணபரிவர்த்தனை விவரங்களை அடிக்கடி கண்காணித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பாக பிக்சட் டெபாசிட் வைத்து இருந்தால் அதையும் அவ்வப்போது செக் செய்ய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications