பயணிகளே நோட் பண்ணுங்க.. 18, 19 ஆம் தேதி.. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 15 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 15 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்து நெரிசல் இன்றி சரியான நேரத்தில் ரயிலில் வந்து விட முடியும் என்பதால் பயணிகள் அதிக அளவில் மின்சார ரயில்களை பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

எனினும், பயணிகளின் பாதுகாப்பிற்காவும், ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் அவ்வப்போது பரமாரிப்பு பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொள்வது வழக்கம். பயணிகளுக்கு பெரிதும் பாதிப்பு இன்றி இரவு நேரங்கள், விடுமுறை நாட்களில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 15 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, சென்னை - தாம்பரம் வழித்தடத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 15 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
நாளை 18 ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.30, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோன்று, நாளை மறுநாள் 19 ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4.15 மற்றும் இரவு 9.30, 11.20, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று மறுமார்க்கத்தில், நாளை தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.15, 11.35 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல, 20 ஆம் தேதி காலை 4.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று நாளை 18 ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 19 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் எழும்பூர் - கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தோடு நின்றுவிடும். கடற்கரை செல்லாது.
இதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் செங்கல்பட்டில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், நாளை மறுநாள் காலை 3.55, 4.35 மணி மற்றும் 20 ஆம் தேதி காலை 3.55 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் கடற்கரை- எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகின்றது. அதாவது சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது அவசியம்..












Click it and Unblock the Notifications