சோழிங்கநல்லூரே மிரளுதே..வேலை பார்த்த வங்கிக்கே விபூதி அடித்த மேரி.. சென்னைக்கே புதுசா இருக்கு!
சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்களால அடகு வைக்கப்பட்ட 54 பவுன் நகைகளை சிறிது சிறிதாக திருடிய துப்புரவு பெண் ஊழியர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
சென்னை சோழிங்கநல்லூரில் ஓஎம்ஆர் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் துப்புரவு பணியாளர் நூதன முறையில் அடகு நகைகளை திருடியது வங்கி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.வேலை பார்த்த வங்கிக்கே விபூதி அடித்த பெண் பற்றி பார்ப்போம்.

சென்னை சோழிங்கநல்லூரில் ஓஎம்ஆர் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு திடீரென கடந்த அக்டோபர் 6-ந் தேதி உயர் அதிகாரிகள் தணிக்கை செய்ய வந்தார்கள். அப்போது அவர்கள் அடகு நகைகள் குறித்து லாக்கர்களில் ஆய்வு செய்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் சிலர் அடகு வைத்து சென்ற தங்க நகைகள் குறைந்தே காணப்பட்டது. இதனால் வங்கியில் அடகு வைத்த அனைவரின் தங்க நகைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் சிறிது சிறிதாக நகைகள் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகள் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க உத்தரவிட்டனர். இதன்படியே வங்கி மேலாளர் செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
செம்மஞ்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைக்கும்போது அதனை பரிசோதித்து பின்னர் அதற்குரிய கவரில் தங்கநகைகளை வைத்து சீல் செய்து லாக்கரில் வைப்பது வழக்கம் என கூறியுள்ளனர்.
ஒவ்வொருவராக விசாரிக்கும் போது வங்கியில் துப்புரவு பணி செய்து வந்த லூர்து மேரி (வயது 39) என்பவரின் முன்னுக்கு பின் முரணான பேச்சுக்களால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனிடையே வங்கியில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்த லூர்து மேரி மீது வங்கி ஊழியர்களுக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து செய்வார் என்பதால் அவர் மீதான சந்தேகத்தை நம்பவில்லை. அதேநேரம் லூர்து மேரிதான் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் தங்க நகைகளை சரிபார்த்து அதை கவரில் போடும் பணியை செய்து வந்தார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட லூர்து மேரி, நகையை கவரில் போடும்போது பல நகைகள் இருக்கும் நிலையில் அதில் ஒரு நகையை மட்டும் திருடி சென்றது தெரிய வந்தது. இவ்வாறு கடந்த 4 மாதங்களாக சுமார் 54 பவுன் தங்க நகைகளை அவர் திருடி சென்றுள்ளார்.
திருடிய நகைகளை அடகு கடை, தனியார் நகை கடன் நிறுவனத்தில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று செலவு செய்து வந்துள்ளார். அவரிடமிருந்து அடகு வைத்த 54 பவுன் தங்க நகைகளை தனிப்படையினர் மீட்டனர். பின்னர் லூர்துமேரியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலை பார்த்த வங்கிக்கே விபூதி அடிக்க பார்த்த மேரி தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.












Click it and Unblock the Notifications